புதுதில்லி:
கொரோனாவையொட்டி, உலகின் பெரும்பாலான நாடுகள், பொதுமுடக்கம் அறிவித்த நிலையில், அனைத்து விதமான வாகனப் போக்குவரத்தும், தொழிற்சாலைகள் இயக்கமும் அடியோடு முடங்கின.
இதனால் உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் தேவை குறைந்து, டபிள்யூடிஐ (வெஸ்ட் டெக்ஸாஸ் இன்டா்மீடியேட்) நிர்ணயிக்கக்கூடிய கச்சா எண்ணெய்யின் விலைபீப்பாய்க்கு பூஜ்யம் அமெரிக்க டாலருக்குக் கீழே சரிந்தது. அதாவது, கச்சா எண்ணெய்வாங்குவோருக்கு, எண்ணெய் நிறுவனங்கள் தான் பணம் அளிக்க வேண்டும் என்ற நிலைஏற்பட்டது. எனினும், அப்போதும் இந்தியாவில் பெட் ரோல் - டீசல் விலை குறைக்கப்படவில்லை. கச்சா எண்ணெய் விலையில் ஒரு அமெரிக்க டாலா் விலை வீழ்ச்சியடைகிறது என்றால்,அதன்மூலம் இந்திய அரசு ரூ. 10 ஆயிரத்து 714 கோடி லாபம் அடையும். இந்த வகையில்,கச்சா எண்ணெய் விலை, பூஜ்யத்திற்கு கீழே போனபோது, பல லட்சம் கோடி ரூபாய் இந்தியஅரசுக்கு மிச்சமானது.எனினும் அந்த பயனை, மத்திய பாஜகஅரசு மக்களுக்கு கிடைக்கச் செய்யவில்லை. மாறாக, பொதுமுடக்க காலத்தில் சுமார் 83 நாட்களுக்கு விலையை மட்டும் உயர்த்தாமல், என்னவோ மக்கள் மீது இரக்கப்படுவது போல காட்டிக் கொண்டது.
ஆனால், பொதுமுடக்கத் தளர்வுகளுக்குப் பிறகு, கடந்த ஜூன் 7 முதல் மீண்டும் விலைகளை உயர்த்த ஆரம்பித்த இந்திய எண்ணெய்நிறுவனங்கள், கடந்த 7 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் 90 காசுகளும், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாயும் காசுகளும் உயர்த்தியுள்ளன.கடந்த ஜூன் 7 அன்று பெட்ரோல் விலைலிட்டருக்கு 70 காசுகளும், டீசல் 60 காசுகளும்உயர்த்தப்பட்டன. அன்றைய நாளில் பெட்ரோல்விலை- தில்லியில் 71 ரூபாய் 86 காசுகள் என்றும்,டீசல் விலை 69 ரூபாய் 99 காசுகள் என்றும் இருந்தது. இது அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, ஜூன் 13 அன்றுபெட்ரோல் விலை 75 ரூபாய் 16 காசுகளாகவும், டீசல் விலை 73 ரூபாய் 39 காசுகளாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.இதுவே கொல்கத்தாவில் பெட்ரோல் விலை 77 ரூபாய் 05 காசுகளாகவும், சென்னையில் 78 ரூபாய் 99 காசுகளாகவும், மும்பையில் 82 ரூபாய் 10 காசுகளாகவும் உயர்ந்துள்ளது. டீசல் விலை கொல்கத்தாவில் 69 ரூபாய் 23 காசுகளாகவும், சென்னையில் 71 ரூபாய் 64 காசுகளாகவும், மும்பையில் 72 ரூபாய் 02 காசுகளாகவும் உயர்ந்துள்ளது.