புதுதில்லி, ஏப். 11 -தெலுங்கானா மாநிலம், மரிக்கால் மண்டலத்திற்கு உட்பட்ட திலேறு கிராமத்தில், புதன்கிழமையன்று நடைபெற்ற சாலைப்பணியின்போது, 11 தொழிலாளர்கள் மண் சரிந்து பலியாகினர். இந்தசம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில், திலேறு தொழிலாளர் களின் மரணத்திற்கு மத்திய - மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் எனவும், ஊரக வேலையுறுதித் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு விஷயத்தில் ஆட்சியாளர்கள் இனியும் அலட்சியமாக இருப்பதை ஏற்க முடியாது என்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கூறியுள்ளது.சங்கத்தின் தலைவர் எஸ். திருநாவுக்கரசு, பொதுச்செயலாளர் ஏ. விஜயராகவன், இணைச் செயலாளர் சுனீத் சோப்ராஆகியோர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இறந்துபோன11 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சமும், காயமடைந்தவர் களுக்கு தலா ரூ. 2 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும்; மேலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், வீடு மற்றும் 3 ஏக்கர் விவசாய நிலம் வழங்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளனர்.இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஊரக வேலையுறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.