tamilnadu

img

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்க

புதுதில்லி:
நாட்டின் பல பகுதிகளிலும் தண்ணீர் பிரச்சனை கடுமையாக இருப்பதைச் சுட்டிக் காட்டிய மாநிலங்களவை உறுப்பினர்கள் இதற்கு மத்திய அரசு உடனடியாகத் தீர்வு காண முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்  மாநிலங்களவையில் திங்கள் கிழமையன்று தொடங்கியதுமே அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் பல உறுப்பினர்கள் குடி தண்ணீர்ப் பிரச்சனையை எழுப்பினார்கள்.பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர் சத்ய நாராயண ஜாத்தியா பேசுகையில் மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடக மாநிலங்கள் எப்போ துமே தண்ணீர் பற்றாக்குறை நிலவும் மாநிலங்களாக இருந்தபோதிலும் தற்போது அது புதிய பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளது எனச் சுட்டிக்காட்டினார். குடிதண்ணீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண அரசு முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நாட்டில் ஓடும் ஐந்து பெரிய நதிகளை இணைப்பதன் மூலம் ஒரு நதியில் உள்ள உபரி நீரை பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல முடியும் என்றும் இதற்கான திட்டங்களை மத்திய - மாநில அரசுகள் தீட்ட வேண்டும் என்றும் கூறினார்.

அடுத்த ஆண்டும் தண்ணீர் நெருக்கடி நீடிக்கும் என்று நிதி ஆயோக் நிறுவனம் எச்சரித்திருப்பதை அசோக் பாஜ்பாய் (பாஜக உறுப்பினர்) சுட்டிக்காட்டினார்.சமாஜ்வாதிக் கட்சியைச் சேர்ந்த சரோஜ்
பாந்தே பேசுகையில், மழைநீர் மூலம் அறுவடை (rain water harvesting) செய்திடும் தொழில்நுட்பத்தின்மீது மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மாநிலங்களவைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு, இப்பிரச்சனை மிகவும் முக்கியமான பிரச்சனை என்பதால் இப்பிரச்சனை மீது குறைந்தகால விவாதத்திற்கோ அல்லது கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கோ  உறுப்பினர்கள் அறிவிப்பு தந்தால் அனுமதிக்கத் தயார் என்று கூறினார்.

அதிகரித்து வரும் மக்கள் தொகை பிரச்சனை
டி.சுப்பராமி ரெட்டி (காங்கிரஸ்) நாட்டில்மிக வேகமாக அதிகரித்து வரும் மக்கள் தொகை பிரச்சனை குறித்து அவையின் கவனத்தை ஈர்த்தார். மக்கள் தொகையில் இந்தியா, விரைவில் சீனாவை முந்திவிடும்என்பதைச் சுட்டிக்காட்டிய அவர்,  குடும்பக்கட்டுப்பாட்டை மேலும் செம்மையாக மேற்கொண்டிட தேவையான ஊக்க நடவடிக்கை கள் (incentives) மற்றும் ஊக்கமிழப்பு நடவடிக்கைகள் (disincentives) எடுக்க வேண்டும் என்றும் கோரினார். நாட்டின் சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் வேலையின்மை அதிகரிப்பு ஆகியவற்றிற்கு மக்கள் தொகை கடும் சுமையாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய ஊக்குவிப்பு மற்றும் ஊக்கமிழப்பு நடவடிக்கைகளின்றி மக்கள்தொகை யைக் கட்டுப்படுத்த முடியாது என்று கூறினார். (ந.நி.)