திருவனந்தபுரம்:
முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற பின்னர், புதிய உறுப்பினர்கள் பதவியேற்பதற்காக கேரள சட்டமன்ற கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன. இந்த மாதம் 24, 25 தேதிகளில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு மற்றும் சபாநாயகர் தேர்தலுக்கு கேரளசட்டமன்ற செயலகம் தயாராகி வருகிறது.
மே 20 ஆம் தேதி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள். அதைத் தொடர்ந்து நடக்கும் முதலாவது அமைச்சரவைக் கூட்டம், சட்டமன்றம் கூடும் தேதி மற்றும் தற்காலிக சபாநாயகரை தீர்மானிக்கும். பின்னர் இந்த பரிந்துரை ஆளுநருக்கு அனுப்பப் படும். அப்போதுதான் ஆளுநர் சட்டமன்றத்தை கூட்டுவதற்கான உத்தரவைபிறப்பிப்பார். இதைத் தொடர்ந்து, சட்டமன்ற செயலாளர், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு எழுத்துப்பூர்வ தகவல்களைவழங்குவார்.முதல் நாள் உறுப்பினர்களின் பதவியேற்பு மற்றும் இரண்டாவது நாள் சபாநாயகர் தேர்தல், துணை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும். இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டவுடன், ஆளுநரின் கொள்கை அறிவிப்பு மற்றும் வரவுசெலவுத் திட்டத்திற்காக சபை மீண்டும் கூடும். இது மே மாதத்திற்குள் நிறைவடையும். பதவியேற்ற பிறகு, சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் அவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். இதற்காக, தற்போதைய உறுப்பினர்களுக்கு அறையை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. புதியஉறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப் படும். கோவிட் சூழலில் பயிற்சி ஆன் லைனில் நடக்கும்.