புதுதில்லி;
அரசு நிர்வாகத்துக்கும் நீதித்துறைக்கும் இடையில் ஒரு நேர்மையான இடைவெளி வேண்டும். நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அது மிகவும் அவசியம். ஆனால்,பலநேரங்களில், ஆட்சியாளர்களுக்கும் நீதித்துறைக்கும் இடையே மறைமுகமாக ஒரு கள்ளக்கூட்டு நிலவி வந்துள்ளதே வரலாறாக உள்ளது.இதற்கு முன்பு, 1970 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தமுகமது இதாயத்துல்லா இந்தியக் குடியரசுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். முன்னாள் குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் இறப்பைத் தொடர்ந்து, பொறுப்புக்குடியரசுத் தலைவராகவும், பின்னர் 1977 முதல் 1984 வரை துணைக் குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தார்.
1983 ஜனவரியில் பஹருல் இஸ்லாம் என்ற நீதிபதி, உச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் காங்கிரசில் சேர்ந்த அவர், பிரதமர் இந்திரா காந்திமூலம் 1983 ஜூனில் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டார். ஆனால், அவர் நீதிபதியாக ஆவதற்கு முன்பே 1962 முதல் 1972 வரை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தவர்தான். எனினும், பாட்னா நகர்ப்புற கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில் அப்போதையபீகார் காங்கிரஸ் முதல்வர் ஜகந்நாத் மிஸ்ராவுக்குச் செய்த உதவிக்காகவே அவருக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.1991-ஆம் ஆண்டு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிபொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் மாநிலங்களவை உறுப்பினராக 1998 -2004 காலகட்டத்தில் பொறுப்பு வகித்தார்.2013-14 காலகட்டத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற பி. சதாசிவத்திற்கு, கேரள ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. குஜராத்தில், அமித்ஷா மாநில உள்துறை அமைச்சராக இருந்தபோது, சொராபுதீன் ஷேக் என்பவர் போலி என்கவுண்ட்டர் வழக்கில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியான துளசிராம் பிரஜாபதியும் 2006-இல் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார். இந்த வழக்கிலிருந்து அமித்ஷாவை விடுதலை செய்ததற்கு பரிசாகவே ஆளுநர் பதவி வழங்கப்பட்டதாக அப்போது சர்ச்சைகள் எழுந்தன. இந்த வரிசையில்தான், ரஞ்சன் கோகோய் நியமன எம்.பி.யாக பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.