tamilnadu

img

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைக்கு நீதி கேட்டு ஜப்பானில் ஆர்ப்பாட்டம்

சென்னை:
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைக்கு காரணமானவர் களுக்கு தகுந்த தண்டனை பெற்று தரவேண்டும் என ஜப்பானில் வாழும் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சாத்தான்குளத்தில் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்ட தந்தை, மகன் மரணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி 10 போலீசாரை கைது செய்துள்ளனர்.தற்போது இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், தந்தை, மகன் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் என ஜப்பானில் வாழும் தமிழர்கள் ஆங்காங்கே பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் தமிழக அரசு, மத்திய அரசு, மனித உரிமைகள் ஆணையம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஜப்பானில் வாழும் தமிழர்கள் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சாத்தான்குளத்தில் போலீசாரால் நிகழ்த்தப்பட்ட மிருகத்தனமான கொலைக்கு எங்கள் கண்டனத்தை பதிவு செய்கிறோம். அமெரிக்காவில் போலீசார் தாக்கி உயிர் துறந்த சம்பவத்தைக் கண்டித்து உலகெங்கும் மக்கள் வெகுண்டெழுந்து தன்னிச்சையான போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் சூழலில், அதனைவிட மிக கொடுமையான கொலை சம்பவம் நமது காவல்துறையினரால் சாத்தான்குளத்தில் தந்தை மகனாகிய ஜெயராஜ் பென்னிக்ஸ் மீது நிகழ்த்தப்பட்டிருப்பது எங்கள் எல்லோரையும் மிகுந்த வேதனையும் கவலையும் கொள்ள செய்கிறது.

இந்த சம்பவம் தமிழக சட்ட ஒழுங்கின் பாதை, தமிழக சாமானிய மக்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் குறித்து மிகுந்த சந்தேகத்தை எழுப்பி உள்ளது.இனியொருமுறை இதுபோன்ற நிகழ்வு காவல்துறையினரால் நடக்காதவண்ணம் உறுதி செய்து, தமிழகத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  நீதியை விரைந்து நிலைநாட்டி இந்த கொலைகளுக்கு காரணமானவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தரவேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறி உள்ளனர்.