புதுதில்லி:
இரண்டாவது முறையாக பிரதமராகியுள்ள நரேந்திர மோடி, கடந்த 4 மாதங்களில் மட்டும் 9 நாடுகளுக்கு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுவந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து,நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.இதற்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில் 7 வெளிநாட்டுப் பயணம் மூலமாக பூடான்,பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், ரஷ்யா, அமெரிக்கா, சவூதிஅரேபியா, தாய்லாந்து, பிரேசில் ஆகிய 9 நாடுகளுக்கு சென்று வந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 7 நாடுகளுக்கும், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு 6 நாடுகளுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இணையமைச்சர் முரளிதரன் ஆகியோர் 16 நாடுகளுக்கும் சென்று வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.