புதுதில்லி:
மத்திய அரசு, மாநிலங்களுக்கு பாக்கிவைத்துள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி, 6 மாநில நிதியமைச்சர்கள், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கண்டிப்புடன் கூறியுள்ளனர்.ஒற்றை வரி என்ற அடிப்படையில், கடந்த 2017 ஜூலையில், ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை (Goods and Services Tax - GST) மத்தியஅரசு அமல்படுத்தியது. இதனால் மாநிலங்களின் வரி வருவாயில் இழப்பு ஏற்படும்என்று எதிர்ப்புகள் எழுந்தபோது, அவ்வாறு ஏற்படும் இழப்பை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசே ஈடுகட்டும் என்றுசமாதானம் செய்யப்பட்டது.
அதாவது, 2015-16 நிதியாண்டின் வரிவருவாயில் 14 சதவிகிதம் என்ற அடிப்படையில், மாநிலங்களின் வரி வருவாய் பாதுகாக்கப்படும் என்றும், இழப்பீடு தற்காலிகமாக கணக்கிடப்பட்டு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.ஆனால், நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் முதல், இந்த இழப்பீட்டுத் தொகை மாநிலங்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் மாநிலங்கள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. மக்கள் நலத்திட்டங்கள் எதனையும் செயல்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.மத்திய அரசோ, இப்போது தருகிறோம், அப்போது தருகிறோம் என்று தொடர்ந்து அலைக்கழிப்பு செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தில்லி, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்குவங்கம் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதியமைச் சர்கள், தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது, மத்திய அரசு தங்களை ஏமாற்றி வருவதாகவும், ஒவ்வொரு முறையும் தில்லிக்கு வந்து இழப்பீட்டுத் தொகையை கேட்டு, கையேந்தி நிற்பது தங்களுக்கு அவமானமாக இருப்பதாகவும் மாநில நிதியமைச்சர்கள் ஆவேசப்பட்டுள்ளனர். மாநிலங்களுக்கு பல பொறுப்புகள் உள்ளன. நிதியில்லை என்பதற்காக சிறைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை மாநில அரசுகளால் மூட முடியாது. ஓய்வூதியங்களையும் நிறுத்த முடியாது. இதனை மத்திய அரசு உணர வேண்டும் என்றும் கண்டிப்புடன் கூறியுள்ளனர்.அதனைக் கேட்டுக்கொண்ட நிர்மலா சீதாராமன், விரைவில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.