புதுதில்லி:
மோடி ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் முன்னெப் போதும் இல்லாத அளவில் மைனஸ் 23.9 சதவிகிதம் என்ற அளவிற்கு அதலபாதாளத்தில் விழுந்துள்ளது. இதனைச் சமாளிப்பது தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் மோடி அரசு ‘எத்தைத்தின்றால் பித்தம் தெளியும்’ என்ற கதையாக, பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் எதையெதையோ செய்து வருகிறது.
அந்த வகையில், எம்.பி.க்களுக்கு ஊதியக் குறைப்பு..நாடாளுமன்றத் தொகுதி நிதி ரத்து.. துவங்கி கடைசியாக ஜிஎஸ்டி இழப்பீடு ரத்துவரை வந்துள்ள மோடி அரசு,மத்திய அரசுத் துறை சார்பில் காலண்டர், டைரிகள் வெளியிடுவதற்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு தடை விதித்தது. இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிசெய்யப்படும் காகிதங்களைக் கொண்டு புத்தகங்களோ, ஆவணங்களோ, பதிப்புகளோ அச்சிடக் கூடாது;ஆண்டு விழா கொண்டாடுவது போன்ற தேவையற்ற கொண்டாட்டங்களை நடத்தக் கூடாது என்றும் தற்போது உத்தரவிட்டுள்ளது.
இவை அனைத்திற்கும் மேலாக, அரசுத் துறைகளில் புதிய பதவிகளுக்காக எந்தப்பணியமர்த்தலும் இருக்கக்கூடாது என்று தடை விதித்துள்ளமோடி அரசு, நிதியமைச்சகத்தின் ஒப்புதல் பெற்றே பதவிகள் உருவாக்கப்பட வேண்டும்; ஒருவேளை ஜூலை 1ஆம் தேதிக்குப் பிறகு பதவிகள் உருவாக்கப்பட்டு அவை செலவுகள் துறையின் ஒப்புதல் பெறப்படாமல் இருந்தால் அந்தப் பணியிடங்களையும் கண்டிப்பாக இனி நிரப்பக் கூடாது என்று தடை விதித் துள்ளது.இந்த உத்தரவுகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறியுள்ளது.