tamilnadu

img

தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் மீதான வழக்கு ரத்து.....

ஔரங்காபாத்:
தில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்குபெற்ற 29 வெளிநாட்டவர்கள் மீதான வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் கிளை ரத்து செய்துள்ளதுடன், தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் பலிகடா ஆக்கப்பட்டதாகவும் நீதிபதிகள்  கண்டனம் தெரிவித்துள்ளனர்.கடந்த மார்ச் மாதம் 29-ஆம் தேதி வெளிநாட்டவர்கள், ஆறு இந்தியர்கள் உட்பட 35 ஜமாத் உறுப்பினர்கள் கொரோனா பரவலுக்குக் காரணமாக இருந்ததாகக் கூறி மூன்று தகவலறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள அகமத் நகர் மாவட்டத்தில் அனுமதியின்றி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் நுழைந்ததாகவும் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.வெளி நாடுகளைச் சேர்ந்த மனுதாரர்கள் தாக்கல் செய்த மூன்று தனித்தனி மனுக்களை உயர் நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் அமர்வின் நீதிபதிகள் டி.வி நளவாடே மற்றும் செவ்லிகர் ஆகியோர் விசாரித்தனர்.

மனுதார்கள் “இந்தியாவைப் பார்க்கவும் இந்திய கலாச்சாரம், விருந்தோம்பல் மற்றும் உணவை அனுபவிக்கவும் இங்கு வந்ததாகவும் விமான நிலையத்தில் முறையாககொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என உறுதியான பின்பே வெளியே செல்ல தங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்”கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட தால் எங்களால் தங்குமிடங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே மசூதி எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தது என்றும் கூறினர்,

பலியாடுகளை தேடும் அரசு
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், “மார்க்காஸ் தில்லிக்கு வந்த வெளிநாட்டினருக்கு எதிராக அச்சு ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் பெரிய பிரச்சாரம் இருந்தது, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு இந்த வெளிநாட்டினர் தான் காரணம் என்று ஒரு படத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு தொற்று அல்லது பேரிடர் நடக்கும் நிலையில், அரசியல் ரீதியாக செயல்படும் அரசு, அதற்கான பலியாடுகளைத் தேட முயற்சி செய்கிறது. வெளிநாட்டினர் பலியாடுகளாக மாற்றப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் காட்டுகின்றன என்று குறிப்பிட்டுள்ளனர்.மேலும் “எங்கள் கலாச்சாரத்தில், ‘அதிதி தேவோ பாவா’ என்று சொல்லப்படுகிறது, அதாவது எங்கள் விருந்தினர் எங்கள் கடவுள் என்பது இதன் பொருள். தற்போதைய பிரச்சனையின் சூழல்கள் நமது பெரிய பாரம்பரியம், கலாச்சாரத்தின் படி நாம் உண்மையில் செயல்படுகிறோமா என்ற கேள்வியை உருவாக்குகின்றன. கொரோனா பரவல் நேரத்தில் நாம் சகிப்புத்தன்மையை காட்ட வேண்டும். குறிப்பாக விருந்தினர்களிடம் (மனுதாரர்களிடம்) நாம் அதிக அக்கறை கொண்டிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.