அகில இந்திய மாணவர் சம்மேளனம் தன்னுடைய செயல்பாடுகளை தீவிரப்படுத்தியது. அத்துடன் மாணவர்களின் உரிமைகளுக்கான போராட்டங்களிலும் ஈடுபட்டது. தமிழ்நாடு மாணவர் சம்மேளனம் அதன் பொதுச் செயலாளர் என்.சங்கரய்யா தலைமையில் மாநிலம் முழுவதும் அமைப்புகளை ஏற்படுத்துவதற்கான பணிகளிலும் தீவிர கவனம் செலுத்தியது. அத்துடன் பல்வேறு போராட்டங்களையும் நடத்தியது.
இந்தக் காலத்தில் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் மாணவர் சம்மேளன உறுப்பினர் ஒருவரை கல்லூரியிலிருந்து நிர்வாகம் விலக்கிவிட்டது. இதை எதிர்த்தும் அந்த மாணவரை மீண்டும் சேர்க்க வலியுறுத்தியும் கல்லூரி மாணவர்கள் ஒற்றுமையாக, ஒட்டுமொத்தமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை எதிர்பார்ககாத கல்லூரி நிர்வாகம் தன் நிலையிலிருந்து பின்வாங்கியது. விலக்கப்பட்ட மாணவரை ஒரே நாளில் மீண்டும் சேர்த்துக் கொண்டது.
இந்தச் சமயத்தில் தான் நெல்லையில் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு தடியடிக்குள்ளானார் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சங்கரய்யா. பின்னர் மாணவர்களுக்காக பயிற்சி முகாம் ஒன்றை சாத்தூர் அருகில் உள்ள சிறுகுளம் என்ற ஊரில் நடத்தினார். இதில் சிபிஐ மாநிலச் செயலாளர் எம்ஆர்.வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார். என்.சங்கரய்யா, ப.மாணிக்கம், எஸ்.ராமகிருஷ்ணன், பெ.சீனிவாசன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த முகாம் நடந்து கொண்டிருந்த போது போலீசார் பெ.சீனிவாசனை கைது செய்தனர். பின்னர் அவரும் ஆனந்த கிருஷ்ணன் என்பவரும் அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அதன்பின்னர்தான் என்.சங்கரய்யா பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையிலிருந்து விடுதலையான பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 1945 பிப்ரவரி 3, 4 தேதிகளில் திருச்சி மாநகரில் தமிழ்நாடு மாணவர் சம்மேளன மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் என்.சங்கரய்யா பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகினார். புதிய செயலாளராக எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். எஸ்.ராமகிருஷ்ணன் சேலம் மாநகரில் அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் தென் பிராந்திய மாநாட்டை சிறப்பாக நடத்தியிருந்தார் என்பதும் அவருடன் பார்வதி கிருஷ்ணனும் தனது பங்கைச் செலுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த மாநாட்டில் 300 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதில் 200 பேர் மாணவர் இயக்கத்துக்குப் புதியவர்கள் ஆவர். இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள். மாநாட்டுப் பிரதிநிதிகள் பலரும் வெவ்வேறு அரசியல் கொள்கையை உடையவர்கள். அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து சம்மேளனத்தைப் பலப்படுத்தி, ஒரு கட்சி சார்பற்ற ஜனநாயக அமைப்பாகத் திகழ்ந்தது. அதனால் மற்ற மாணவர் சங்கங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்கிற அறைகூவலை மாநாடு விடுத்தது. சம்மேளனத்தின் பரந்த திட்டத்தை ஒப்புக் கொள்பவர் எவரும் சம்மேளனத்தில் பணியாற்றலாம் என்றும் அதே நேரத்தில் கருத்து மாறுபாடுகளை கைவிட வேண்டியதில்லை; அவர்களுக்கு தங்கள் கருத்துக்களை பிரச்சாரம் செய்யவும் உரிமையுண்டு என்றும் மாநாடு முக்கியமான பிரகடனத்தையும் வெளியிட்டது.
அத்துடன் மாணவர்களின் உரிமைகளுக்காகவும் நாடு தழுவிய கல்வித் திட்டத்துக்காகவும் பாடுபடுவதென மாநாடு முடிவு செய்தது. பஞ்சத்திலும் தொற்று நோயிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதென்றும் மாநாடு முடிவெடுத்தது. மேலும் பாசிச எதிர்ப்புப் போரில் முழுமையாகப் பங்கெடுக்கும் தேசிய அரசாங்கத்தை அமைக்கவும் உயிருக்குயிரான நோக்கமாகிய விடுதலையைப் பெறவும் காங்கிரஸ் - முஸ்லிம் லீக் ஒற்றுமையை உருவாக்கவும் பாடுபடுவதென மாநாடு உறுதி பூண்டது.
1942ஆம் ஆண்டு ஜூலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இந்த காலத்தில் “காந்தி - ஜின்னா மீண்டும் கூடுக” என்ற தலைப்பில் பிரசுரம் வெளியிட்டது கட்சி. லட்சக்கணக்கில் அந்தப் பிரசுரத்தை மக்களிடம் கொண்டு சென்று மாணவர் சம்மேளனம் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. அந்தச் சமயத்தில் நாட்டின் தேசபக்தர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த உணர்வுக்கு மாணவர் சம்மேளனம் தகுந்த வடிவம் கொடுத்தது. கட்சி வேறுபாடின்றி மாணவர்களையும் மக்களையும் மாணவர்கள் அணிதிரட்டினர். இத்தகைய சூழ்நிலையால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காந்தியும் ஜின்னாவும் சந்தித்துப் பேசினர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராஜாஜி “காந்தி - ஜின்னா சந்திப்பு மாணவர் சம்மேளனத்தின் பிரயாசையின் பலன்” என்று பாராட்டினார் என்று எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் தனது தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் எனும் நூலில் மேற்கொள் காட்டியுள்ளார்.
1942-43ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வங்கப் பஞ்சம் உலக யுத்தத்தின் விளைவாக ஏற்பட்டதாகும். வங்கம் மற்றும் ஒரிசா போன்ற கடற்கரையோர மாகாணங்களில் ஜப்பானிய விமானங்களின் குண்டுவீச்சும் அந்தப் படைகள் எந்த நேரமும் உட்புகலாம் என்ற நிலையும் சேர்ந்து விவசாயத்தை மிகவும் பாதித்துவிட்டது. அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி வசூல் தமிழகத்தில் முழு வேகத்தில் நடைபெற்றது. கட்சி சார்பில் நாடகங்கள் நடத்தப்பட்டன.
வங்கப் பஞ்சம் என்ற நாடகத்தில் கே.பி.ஜானகி, எஸ்.குருசாமி, பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா, கே.பால தண்டாயுதம் போன்ற இளம் தலைவர்கள் நடித்தனர். ஜானகியின் சோகமான பாடல் கேட்போரை கண்கலங்க வைக்கும். நாடகத்தின் முடிவில் நிதி வசூல் நடைபெறும். அதுமட்டுமின்றி மாணவர் சம்மேளனத்தின் சார்பில் மருத்துவ மாணவர்கள் குழு வங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எஸ்.ராமகிருஷ்ணன் தலைமையில் இ.பாலகிருஷ்ணன், கமலா மற்றும் பல மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வங்கம் சென்று மருத்துவ சேவையில் ஈடுபட்டனர்.