புதுதில்லி:
கருத்துக் கணிப்புகளை நடத்துவதில் முன்னோடி நிறுவனங்களான ஐஏஎன்எஸ் - சி.வோட்டர்ஸ் (IANS-C Voter) இணைந்து, மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து “ஸ்டேட் ஆப் தி நேஷன் 2020 : மே”என்ற தலைப்பில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கருத்துக் கணிப்புநடத்தியுள்ளனர்.இந்த சர்வேயில் ஒவ்வொரு மாநிலத்திலும் தலா 3 ஆயிரம் பேரிடம் கருத்துகளைக் கேட்டு, அதனடிப்படையிலான முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
இதில், மோசமான முதல்வர்கள் பட்டியலில், முதல் இரண்டு இடங்களையும் பாஜகவைச் சேர்ந்த முதல்வர்களேபெற்றுள்ளனர். ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் (பாஜக), உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் (பாஜக)ஆகியோரே, மக்களின் அதிருப்தியை பெற்ற அந்த முதல் 2 முதல்வர்கள் ஆவார்கள். இதில், ஹரியானா முதல்வர் கட்டாருக்கு 4.47 சதவிகித மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.இவர்களுக்கு அடுத்தடுத்த இடங்களில் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் (காங்கிரஸ்), பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தும் பீகார்முதல்வர் நிதிஷ் குமார் (ஜேடியு), தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக), கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் (பாஜக), மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி (டிஎம்சி), தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் (டிஆர்எஸ்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மோசமான ஆட்சி நடத்தும் 8 மாநிலமுதல்வர்களில் பாஜக-வினர் 3 பேர்,பாஜக ஆதரவு பெற்றவர் ஒருவர் என மொத்தம் 4 பேர் இடம்பெற்றுள்ளனர். பாஜக கூட்டணி கட்சி என்பதையும் சேர்த்துக் கொண்டால், இந்த எண் ணிக்கை 5 ஆகும்.சிறந்த முதல்வர்களுக்கான சி-வோட்டர் கருத்துக் கணிப்பில், ஒடிசாமுதல்வர் நவீன் பட்நாயக்-கிற்கு(பிஜேடி) முதலிடம் வழங்கப்பட்டுள் ளது. 82.96 சதவிகித மக்கள் அவரை ஆதரிப்பதாக கூறப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் (காங்கிரஸ்) 81.06 சதவிகித மக்கள் ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் வந்துள்ளார். கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் முதல்வர் பினராயி விஜயனுக்கு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) மூன்றாவது இடம் வழங்கப்பட்டுள்ளது. அவர் 80.28 சதவிகித மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்), உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அடுத்தடுத்து வந்துள்ளனர்.
இந்த சிறந்த முதல்வர்களில் ஒருவர் கூட பாஜக-வைச் சேர்ந்தவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எட்டாவது இடத்தில்தான் இமாச்சல் பாஜக முதல்வர் ஜெய்ராம் தாக்குர் வந்துள்ளார்.