புதுதில்லி:
ராணுவ நடவடிக்கைகளை, பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து அரசியலாக்கி வருகிறார். இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் போதெல்லாம் என்னுடைய அரசு எல்லைத் தாண்டிச் சென்று பயங்கரவாத முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துகிறது என்று, வழக்கமான ராணுவ நடவடிக்கைகளைக் கூட, தனது சாதனை போல பேசிக் கொண்டிருக்கிறார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே, பதிலடி கொடுத்திருக்கின்றன.சர்ஜிக்கல் ஸ்டிரைக் புதிய விஷயமல்ல; தங்கள் ஆட்சியிலும் கூட 6 முறை துல்லியத் தாக்குதல் எனப்படும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியுள்ளோம் என்று காங்கிரஸ் கட்சியும் கூறியது.
முதல் தாக்குதல் ஜூன் 19, 2008-ல் பூஞ்சின் பாத்தால் செக்டாரில் நடத்தப்பட்டது. இரண்டாவது தாக்குதல் ஆகஸ்ட் 30-செப்டம்பர் 1, 2011-ல் நீலம் ஆற்றுப்படுகையில் உள்ள சார்தா செக்டாரில் நடத்தப்பட்டது. மூன்றாவது, ஜனவரி 6, 2013-ல் சுவான் பாத்ரா செக்போஸ்ட் பகுதியில் நடத்தப்பட்டது. மற்றொரு தாக்குதல் ஜூலை 27 மற்றும் ஜூலை 28, 2013-ல் நசாபியர் செக்டாரில் நடத்தப்பட்டது. ஐந்தாவது தாக்குதல் நீலம் பள்ளத்தாக்கில் ஆகஸ்ட் 6, 2013ல் நடத்தப்பட்டது, ஆறாவது தாக்குதல் ஜனவரி 14, 2014-ல் நடத்தப்பட்டது என்று தேதிகளையும் வெளியிட்டனர்.
ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் வீடியோ கேம் வேண்டுமானால் விளையாடியிருப்பார்கள்; துல்லியத் தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று மோடி கிண்டலடித்தார்.
அவரின் இந்த கிண்டல், ராணுவத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காங்கிரசை விமர்சிக்கிறேன் என்ற பெயரில், இந்திய ராணுவத்தினர் அர்ப்பணிப்பை மோடி கொச்சைப்படுத்துவதாக ராணுவ அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனர்.அதனொரு பகுதியாக, முன்னாள் ராணுவ அதிகாரியும், ‘பௌஜி ரிப்போர்டர்’ பத்திரிகையின் ஆசிரியருமான அசோக் குமார் சிங்கும், மோடி பேச்சுக்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“நான் 10 ஆண்டுகள், எனது உயிரைப் பணயம் வைத்து இந்த நாட்டுக்கு சேவை செய்துள்ளேன். ஆனால், பிரதமராக பதவி வகிக்கும் நரேந்திர மோடி என்ற மனிதர் என்னை வீடியோகேம் விளையாடியதாக கேவலமாக பேசுகிறார். நான் என்ன சொல்வது?” என்று குறிப்பிட்டுள்ளார்.
“ராணுவத்தில் பகுதி நிலைகளிலான சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல்கள் முன்பே நடத்தப்பட்டுள்ளன. ஆனால், ஒரு வித்தியாசம் என்னவெனில், அவை இப்போதுதான் தேசிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு அரசியல் ஆக்கப்படுகின்றன” என்று எம்.பி.எஸ். பஜ்வா என்ற இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற பிரிகேடியரும் கண்டித்துள்ளார்.பிரிகேடியர் பஜ்வா, கடந்த 1999-ஆம் ஆண்டு கார்க்கில் யுத்தத்தில், பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த ‘டைகர் ஹில்ஸ்’ பகுதியைக் கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவருக்கு வீரதீரச் செயலுக்கான விருதும் வழங்கப்பட்டது. 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரிலும் பிரிகேடியர் பஜ்வா பங்கேற்றுள்ளார்.
மோடி ஆட்சிக்கு முன்பும், சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகள் நடத்தப்பட்டுள்ளன என்று முன்னாள் லெப்டினெண்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடாவும் அண்மையில் கூறியிருந்தார். மோடி கூறும், 2016-ஆம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை முன்னின்று நடத்தியவர்தான் டி.எஸ். ஹூடா ஆவார்.