மும்பை:
மகாராஷ்டிர மக்கள், தங்கள் எதிரிகளை (பாஜக) அரபிக் கடலில் மூழ்கடிப்பார்கள் என்று, சாம்னா தலையங் கத்தில் சிவசேனா கடுமையாக சாடியுள்ளது.
இந்தியாவின் வர்த்தக தலைநகராக மும்பை உள்ளது. பன்னாட்டு வர்த்தகமற்றும் நிதி நிறுவனங்கள், தங்கள் தலைமையகங்களை மும்பையில்தான் நிறுவியுள்ளன. இந்நிலையில் மும்பையில் உள்ள சர்வதேச நிதிச் சேவை மையத்தை (International Financial Service Center - IFSC), பாஜக ஆளும் குஜராத்மாநிலம் காந்தி நகருக்கு மாற்றி மத்தியபாஜக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவே, ‘பாஜக-வை அரபிக்கடலில் மூழ்கடிப்போம்’ என்று ஆளும் சிவசேனா கட்சி, தனது ‘சாம்னா’ ஏட்டில் தலையங்கம் தீட்டியுள்ளது.பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிர முதல்வராக இருந்த போதுதான், மும்பை சர்வதேச நிதிச் சேவை மையத்தை, குஜராத்தின் அகமதாபாத்திற்கு மாற்றும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு அவர் எந்த ஆட்சேபணையும் எழுப்பவில்லை. பட்னாவிஸ் மகாராஷ்டிராவுக்கு பதிலாக குஜராத்தை ஆதரிக்கிறார் என்று அப்போதே சிவசேனா குற்றம் சாட்டியது. இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்சரத்பவாரும் எதிர்ப்புக் குரல் எழுப்பியிருந்தார்.
எனினும் அந்த எதிர்ப்புக்கள் அனைத்தையும் மீறி, நிதிச் சேவை மையம் குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ‘வெட்கமில் லாத’ மக்கள் (தேவேந்திர பட்னாவிஸ்உள்ளிட்ட பாஜக-வினர்) மகாராஷ்டிராவில் வாழ்கிறார்கள் என்றும் அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு ‘விசுவாசமற்றவர்கள்’ என்றும் சாம்னா சாடியுள்ளது.மேலும், “மும்பை நாட்டின் 50 சதவிகித மக்களுக்கு உணவளிக்கிறது; நாட்டின் 30 சதவிகித வரி மும்பையிலிருந்து மட்டுமே செல்கிறது; இந்த உண்மைகளை ஏற்க விரும்பாத எவரும் மகாராஷ்டிராவில் வாழத் தகுதியற்றவர்கள்” என்று குறிப்பிட்டுள்ள ‘சாம்னா’தலையங்கம், “மகாராஷ்டிர மாநில மக்கள், இவர்களை அரபிக் கடலில் மக்களை மூழ்கடிக்கும் நாள் கட்டாயம் வரும்” என்றும் கொதித்துள்ளது.