இந்தூர்:
மத்திய பாஜக அரசை விமர்சிக்க முடியாத நிலைஇருப்பதாகவும், எங்கே மத்திய அரசை விமர்சித்தால்தாங்கள் தாக்கப்படுவோமோ? என்று கார்ப்பரேட் முதலாளிகளும் கூட அஞ்சுவதாகவும் பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ் கூறியிருந்தார்.பாஜக தலைவர் அமித் ஷாவை மேடையில் வைத்துக் கொண்டே ராகுல் பஜாஜ் இவ்வாறு பேசியது, ஊடகங்களில் தற்போது விவாதமாகி இருக்கிறது.இந்நிலையில், “பாஜக அரசை விமர்சிப்பதற்கு நானும் பயந்திருக்கிறேன்” என்று மக்களவை முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் பரபரப்பை கிளப்பியுள்ளார். சுமித்ரா மகாஜன், பாஜகமூத்தத் தலைவர்களில் ஒருவர் என்பதுடன், 2014 முதல் 2019 வரை மக்களவை சபாநாயகராகவும் பதவி வகித்தவர். இந்தூர் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக 8 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.
அவர்தான், “சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு, மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி செய்தபோது, என்னால் கூடஅரசை எதிர்த்து எதுவும் பேசமுடியாத நிலை இருந்தது; நான் காங்கிரசைச் சேர்ந்த இந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர்களான ஜீது பல்வானி மற்றும் துளசி சிலாவத் மூலமாகவே பிரச்சனைகளை அரசுக்கு கோரிக்கையாக தெரிவிக்க வைப்பேன்” என்று கூறியுள்ளார்.