புதுதில்லி:
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் ஜனவரி 5 ஞாயிறு இரவு வெளியாட்கள் முகமூடி அணிந்து வந்து கொடூரமான முறையில் தாக்குதல் தொடுத்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
துணைவேந்தரை உடனடியாக நீக்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:தில்லி காவல்துறையினரின் மிகப்பெரிய அணியினருடன் முகமூடி அணிந்த ரவுடிகள் ஆயுதங்களுடன் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்திற்குள் மாணவ-மாணவிகளின் விடுதிகளுக்குள் புகுந்து, மாணவர்களை சுமார் மூன்று மணி நேரம் இரும்புக் கம்பிகளால் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். ஜேஎன்யு மாணவர் பேரவைத் தலைவர் அய்ஷே கோஷ் மீது தாக்குதல் தொடுத்து அவருக்கு படுகாயங்களை விளைவித்திருக்கிறார்கள். இவரும் மற்றும் 20 மாணவர்களும், ஆசிரியர்களும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். பல்கலைக் கழக வளாகத்திற்குள் புகுந்து மணிக்கணக்கில் சூறையாட துணைவேந்தரும், பல்கலைக்கழக அதிகாரிகளும் வெளியாட்களை அனுமதித்திருக்கின்றனர். வெகு தாமதமாகவே போலீஸ் தலையீட்டுக்காகக் கோரியிருக்கின்றனர். இதற்கு எவ்விதமான காரணத்தையும் கூறமுடியாது. இதுவும் கூட போலீசார் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்றும், தில்லி துணை ஆளுநர் கயவர்களைத் தண்டித்திட வேண்டும் என்றும் கட்டளையிட்ட பின்னர் தான் நடந்திருக்கிறது.
நாட்டின் முதன்மைப் பல்கலைக் கழகமாக விளங்கும் ஒரு பல்கலைக் கழகத்தை படிப்படியாக அரித்து வீழ்த்தி, தகர்த்துவிட வேண்டும் என்பதற்கு, துணைவேந்தரே ஒரு கருவியாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதன் காரணமாகத்தான் பல மணி நேரம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் ரவுடிகள் நடத்திய வெறியாட்டத்தைக் கண்டுகொள்ளாமல் அவற்றை அனுமதித்திருக்கிறார். இவ்வாறு ரவுடிகள் தாக்குதல் தொடுப்பதற்கு அனுமதி அளித்ததன் மூலம், அதற்கு உடந்தையாக இருந்ததற்காக துணை வேந்தர் நீக்கப்பட வேண்டும். அதன்மூலம் வளாகத்திற்குள் இயல்பு திரும்பிட உத்தரவாதமான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.மத்திய உள்துறை அமைச்சர், இது இரு குழுக்களுக்கு இடையேயான மோதல் என்று சித்தரிக்க முயல்கிறார். அது உண்மையல்ல. அங்கு நடத்தப்பட்ட வெறியாட்டம் குறித்து நாடு முழுதும் மிகவும் வேகமாகப் பரவியுள்ள வீடியோ பதிவுகளும், வாட்ஸ்சாப் குழுக்களில் “இடதுசாரிகளுக்கு எதிராக ஒன்றுபடு”(“Unite Against the Left) என்பது போன்று வெளியாகியுள்ள வீடியோ காட்சிகளும், இந்தத் தாக்குதல் ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரிந்தே, முன்கூட்டியே திட்டமிட்டு, நிறைவேற்றப்பட்டது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. வெளியாட்கள் எழுப்பிய கோசங்களில் இந்தத் தாக்குதல் தொடுத்த குண்டர்கள், ஆர்எஸ்எஸ்/பாஜகவின் ஆட்கள் என்பது தெளிவாகிறது. இந்தக் குண்டர்கள் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது. (ந.நி)