கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்பட்டன. நேற்று காலையில் இருந்தே ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு வரத்தொடங்கினர். சிறிது நேரத்தில் எண்ணிக்கை அதிகரிக்க, பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி 42 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு துரித பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விஷச்சாராயத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதுமட்டுமின்றி உயிரிழந்தவர்களின் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய அவர், பாதிக்கபட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினார். இந்நிகழ்வின் போது கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ஜெயசங்கர், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.