புதுதில்லி:
ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேவின் ‘சாணக்கியா யூ டியூப்’ சேனலுக்கு, கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், யாகம் வளர்த்தால் மழை வருமா? என்றகேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். அது வருமாறு:
“ஒரு வருடத்திற்கு முன்பு, நிலநடுக்கம் ஏற்படக் கூடாது என்பதற்காக ஆந்திராவில் பெரிய யாகம் ஒன்று நடைபெற்றதாகவும் அதில்ஒரு லட்சம் பேர் வரை கலந்துகொண்டதாகவும் என்னிடம் ஒருவர் சொன்னார். அத்துடன் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்றும் என்னிடம் கேட்டார்.அதற்கு நான், ‘வெள்ளியங்கிரி மலை எரிமலையாகாமல் இருக்க நானும் ஒரு யாகம் செய்கிறேன், அது கண்டிப்பாக சாத்தியமாகும்’ என்றேன். அதாவது, அந்த நபர்கள் ஆந்திராவில் யாகம் செய்வதற்குப் பதில்,அடிக்கடி பூகம்பம் ஏற்படும் குஜராத்தில் சென்று அவர்கள் யாகம் நடத்தி பூகம்பத்தை தடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதுதான் எனது பதில். அதேபோல எங்கே மழை இல்லையோ அங்கே சென்று யாகம் செய்யலாம்.
மந்திரத்துக்கு சக்தி இல்லை என்று யாரும் சொல்லவில்லை. அதனை எதற்கு உபயோகப் படுத்த வேண்டும், எதற்கு உபயோகப்படுத்தக் கூடாது என்ற தெளிவு இருந்தாக வேண்டும்.முன்பு சுற்றுச்சூழலுக்கான பணிகளை செய்துவிட்டு வருண பூஜையில் ஈடுபட்டார்கள். ஆனால்,ஒன்றுமே செய்யாமல் பூஜையில் ஈடுபட்டால் மழை வந்துவிடுமா? அடுப்பையே பற்ற வைக்காமல் கைகும்பிட்டுக்கொண்டு இருந் தால் சமையல் ஆகிவிடுமா? அந்தகதைதான், மழைக்காக யாகம் நடத்துவதும்.”இவ்வாறு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.தமிழகத்தில் மழை பெய்வதற்காக அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் உட்பட பலரும் கோயில்களில் யாகம் நடத்திவரும் நிலையில், யாகம் மட்டும் நடத்தினால் மழை வந்துவிடாது என்று, மறைமுகமாக ஜக்கி வாசுதேவ் விமர்சித்துள்ளார்.