tamilnadu

img

‘உயர்’ சாதியினரால் நிரம்பி வழியும் இந்தியக் கலாச்சார ஆய்வுக் குழு... 16 பேரில் தலித்துக்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் ஒருவர் கூட இல்லை; தென்னிந்தியாவும் புறக்கணிப்பு

புதுதில்லி:
இந்திய கலாச்சாரத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து, புதிதாக ‘முழுமையான’ ஆய்வு ஒன்றை நடத்தப் போவதாக அறிவித்துள்ள மத்திய பாஜக அரசு, அதுதொடர்பாக ‘நிபுணர் குழு’ ஒன்றையும் அமைத்துள்ளது. 
ஆனால், அறிஞர்களை நியமிப்பதற்குப் பதிலாக, இந்தக் குழுவை சாதியவாதிகளையும், மதவாதிகளையும் கொண்டு மோடி அரசு நிரப்பியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்தியக் கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவில் தலித்துக்களும் சிறுபான்மையினரும் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கும் ஒருவருக்கு கூட பிரதிநிதித்துவம் வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கலாச்சார ஆய்வுக்குழு தொடர்பாக,மக்களவையில் கேள்வி கேட்கப்பட்டநிலையில், குழுவில் இடம்பெற்றிருப்பவர்களின் விவரத்தை, மத்திய சுற்றுலாமற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் எழுத்துப் பூர்வமாக அளித்துள்ளார்.அதில், இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மொத்தம் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்திய தொல்பொருள் சங்கத்தின் தலைவர் கே.என். தீக்‌ஷித், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் முன்னாள் இணை இயக்குநர் ஜெனரல் ஆர்.எஸ். பிஷ்த், தேசிய அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் பி.ஆர். மணி, ஜவஹர்லால் நேருபல்கலைக்கழக பேராசிரியர் சந்தோஷ் சுக்லா, ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தானத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி.என். சாஸ்திரி, உலக பிராமண கூட்டமைப்பின் ‘சங்மார்க்’ தலைவர் எம்.ஆர். ஷர்மா உள்ளிட்ட மொத்தம் 16 பேர் குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதையொட்டியே, இந்த 16 குழுவில் பெண்கள், தலித்துக்கள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த ஆய்வறிஞர்கள் ஒருவருக்கு கூட இடமளிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமன்றி, வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும், தென்னிந்தியாவிலிருந்தும் ஒரு அறிஞருக்குக் கூட இடம் வழங்கப்படவில்லை என்பதும் அம்பலமாகியுள்ளது.

ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தானத் தின் துணைவேந்தர் பேராசிரியர் பி.என். சாஸ்திரி, உலக பிராமண கூட்டமைப்பின் ‘சங்மார்க்’ தலைவர் எம்.ஆர். ஷர்மா உள்ளிட்டோரின் நியமனம் மூலம், மோடி அரசு அப்பட்டமாக தனது சனாதன கொள்கையை வெளிப்படுத்தியுள்ளது.3 ஷர்மாக்கள், 2 சுக்லாக்கள், 1 சாஸ்திரி, 1 தீட்சித் மற்றும் 1 பாண்டே என மத்திய அரசு அமைத்துள்ள குழு உயர் சாதியினரால் நிரம்பி வழிகிறது.மத்திய பாஜக அரசின், இந்த செயலுக்கு கண்டனங்கள் குவியத் துவங்கியுள்ளன. இதன்மூலம் இந்தியக் கலாச்சாரமே உயர்சாதி இந்துக்களின் கலாச்சாரம்தான் என்று சொல்ல வருகிறதா? பெண்கள், தலித்துக்கள், சிறுபான்மையினரை இரண்டாந்தரக் குடிமக்களாக பாவிக்கிறதா? தென் னிந்தியர்களைப் புறக்கணித்ததன் மூலம் இந்தியா என்றால் அது வடஇந்தியாதான் என்று மீண்டும் நிறுவ முயற்சிக்கிறதா? பல்வேறு விதமான கேள்விகள் முன்னுக்கு வந்துள்ளன.