tamilnadu

img

கடுமையான பொருளாதார மந்தத்தை நோக்கி வீழ்க்கிறது இந்தியா

புதுதில்லி:
இந்திய பொருளாதாரம் மிகக் கடுமையான மந்தத்தை நோக்கி வீழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை மோடி அரசு ஏற்க மறுக்கிறது; அதன் விளைவாக, கோடிக்கணக்கான ஏழை - எளிய - நடுத்தர வர்க்க மக்களை மிகக் கடுமையான வறுமை படுகுழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு குற்றம் சாட்டியுள்ளது.

கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டம் நவம்பர் 16, 17 தேதிகளில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் பொருளாதார துயரம் தொடர்பாக இடம் பெற்றுள்ள அம்சம் வருமாறு:

மோடி அரசாங்கம், கடந்த இரு காலாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விதிகம் வீழ்ச்சியடைந்திருப்பதன் விளைவாக பொருளாதார மந்தத்தை நோக்கி இந்தியப் பொருளாதாரம் சென்று கொண்டிருக்கிறது என்கிற உண்மையைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பெரும்பான்மை மக்களின் மீது சுமைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்றப்பட்டிருக்கின்றன. தேசிய மாதிரி சர்வே அமைப்பு வெளியிட்டுள்ள தரவு, கிராமப்புறங்களில் மக்களின் நுகர்வு செலவினம் 2017-18இல் 8.8 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாகக் காட்டுகிறது. இது கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியாகும். இதனால் மக்களின் வறுமை நிலை அதிகரித்திருக்கிறது. இந்த அறிக்கையை ‘புள்ளி விபரங்கள் தரமானவையாக இல்லை’ என்று கூறி அரசாங்கம் இப்போது விலக்கிக் கொண்டிருக்கிறது. மோடி அரசாங்கம், ஒட்டுமொத்த தரவுகளையும் கடைசி நேரத்தில் மாற்றியமைத்திடும் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. தரவுகளின் நம்பகத்தன்மை இன்மை, உலக அளவில் இந்தியா தரப்படுத்தப்படுவதை மிகவும் கடுமையாகப் பாதித்திருக்கிறது.

நமது பொருளாதாரம், விவசாயம், தொழில்கள் மற்றும் சேவைகள் என அனைத்துத் துறைகளும் கடும் பொருளாதார மந்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. தொழில் உற்பத்தி கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு செங்குத்தாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. மின்சாரத்தின் தேவையும் கடந்த 12 ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்திருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தின் அனைத்து நடப்பு மதிப்பீடுகளும் 5 சதவீதத்திற்கும் கீழே வீழ்ந்திருப்பதையே காட்டுகின்றன.
வேலையின்மை விகிதங்கள் கடந்த ஐம்பதாண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்திற்குச் சென்றிருக்கிறது. மிகப்பெரிய அளவில் ஆலை மூடல்கள், தொழிலாளர்கள் எண்ணிக்கை வெட்டிக் குறைக்கப்படுதல் என்பது தகவல் தொழில்நுட்பத் துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் நடந்து கொண்டிருக்கின்றது.எல்லாவற்றிற்கும் மேலாக அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரை வார்த்திட மிகப்பெரிய அளவில் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. இது, நாட்டின் சுயசார்புத் தன்மையை அழித்துவீழ்த்துவதுடன், மோடி அரசாங்கத்தின் கூட்டுக் களவாணி கார்ப்பரேட் நண்பர்களுக்கு நேரடியாக ஆதாயத்தை அளித்திடும். இத்தகைய தனியார்மயம், நாட்டில் ஏற்கனவே மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கும் வேலையின்மையை மேலும் கூடுதலாக்கிடும். மேலும், இந்திய சமூகத்தில் விளிம்புநிலையில் உள்ள பிரிவினருக்கு, இட ஒதுக்கீடுகள் மூலமாக சற்றே கிடைத்திட்ட பயன்களும் ஆழமானமுறையில் அரித்து வீழ்த்தப்படும்.
பெரும்லான மக்களின் வாங்கும் சக்தி கூர்மையான முறையில் வீழ்ச்சியடைந்திருப்பதே பொருளாதார மந்தத்திற்குக் காரணமாகும்.

பொருளாதார வீழ்ச்சியைச் சரிப்படுத்திட ஒரே வழி, மக்களுக்கு வாங்கும் சக்தியை அளிப்பதேயாகும். இதற்கு, உள்நாட்டு கிராக்கியை அதிகரித்திட வேண்டும். இது, மூடியுள்ள ஆலைகளைத் திறப்பதற்கு இட்டுச் செல்லும். மோடி அரசாங்கம், இரண்டு தவணைகளில் 2 லட்சத்து 15 ஆயிரம்கோடி ரூபாய் வரிச் சலுகைகளை, கார்ப்பரேட்டுகளுக்கு அளித்திருக்கிறது. இவற்றின்மூலம் முதலீடுகள் அதிகரித்திடும் என்று நம்புகிறது. அதிகரித்திடும் முதலீடுகள், பொருளாதாரத்தை மீட்காது. அதற்கு அத்தகைய புதிய முதலீடுகளால் உற்பத்தி செய்யப்படுவனவற்றை வாங்கும் சக்தி மக்களுக்கு இருந்திட வேண்டும். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின் மூலம் நிலைமை மேலும் மோசமாகும்.மாறாக, இந்த 2.15 லட்சம் கோடி ரூபாயை நமக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், சமூகப் பொருளாதாரக் தேவைகளைக் கட்டி எழுப்பக்கூடிய விதத்தில் பொது முதலீட்டில் பயன்படுத்தியிருந்தால், அது பல லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை, வேலையில்லா இளைஞர்களுக்கு அளித்திருந்திருக்கும். அவர்கள் தங்கள் ஊதியத்தை செலவு செய்ய ஆரம்பிக்கும்போது, உள்நாட்டு கிராக்கி அதிகரித்து, அதன் மூலம் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியை நோக்கி வளர ஆரம்பிக்கும். மாறாக, இந்த அரசாங்கம் மிகவும் குரூரமான முறையில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் அளிக்க வேண்டிய 13 கோடி ரூபாயில் இரண்டு கோடி ரூபாயைத் திருப்பி விட்டிருக்கிறது.எனினும், மோடி அரசாங்கம், அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு கொள்ளை லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பு வசதிகளை அளிப்பதற்காக, சலுகைகள் மேல் சலுகைகளாக வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. அதன் மூலமாக, பெரும்பான்மையான மக்களை மேலும் வறுமைக் குழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது.