தில்லியில் கடந்த 118 ஆண்டுகளாக இல்லாத கடும் பனி மூட்டம் நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
டெல்லியில் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே கடும் குளிர் நிலவி வருகிறது. டெல்லி சப்தர்ஜங்கில் உள்ள வானிலை மையம் அளித்த அறிக்கையின்படி, இன்று டெல்லியில் குறைந்தபட்சமாக லோதி சாலையில் 1.7 செல்சியஸ் பதிவானது. அதற்கு அடுத்தாற்போல் அயா நகரில் 1.9 டிகிரி செல்சியஸும், பாலம் பகுதியில் 3.1 டிகிரியும், சப்தர்ஜங் பகுதியில் 2.4 டிகிரி செல்சியஸும் பதிவானது.
கடுமையான பனி மூட்டம் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலையில் எதிரில் வரும் வாகனம் தெரியவில்லை. ஏறக்குறைய 150மீட்டர் வரை வாகனங்கள் தெளிவாகத் தெரியாததால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். கடும் பனிமூட்டத்தால் விமானப் போக்குவரத்து தடைபட்டு விமானங்கள் திருப்பி விடப்பட்டன.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.