புதுதில்லி:
பெண்கள் பாதுகாப்பு குறித்து அறிவுரை கூறிய போலீஸ் அதிகாரியை, உத்தரப்பிரதேச பள்ளி மாணவி ஒருவர்மடக்கி மடக்கி கேள்வி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக, போலீசார் புதன் கிழமையன்று கல்வி நிலையங்களில் சிறப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனொரு பகுதியாக, ‘பாரபங்கி’ என்ற இடத்திலுள்ள பள்ளியிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளனர்.
அப்போது 11-ஆம் வகுப்பு மாணவி, பல்வேறு கேள்விகளை எழுப்பி,போலீசாரை திணறடித்துள்ளார்.பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட உன்னாவ் இளம்பெண் கார் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடி வரும் நிலையில், இதனை சுட்டிக் காட்டிப் பேசிய ஒரு மாணவி, “நீங்கள்,‘பெண்கள் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்’ எனக் கூறுகிறீர்கள். இங்கே பாஜக எம்எல்ஏ-வால் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் விபத்தில் சிக்கியிருக்கிறார்; அதுவிபத்து அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்; அப்படியிருக்க, நாங்கள் புகார் தெரிவித்தாலும் விபத்துநடக்குமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.“பலம் வாய்ந்தவர்களை எதிர்த்தால் எங்கள் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம். எனக்கும் இதுபோன்று நேராது என்பதற்கு என்னஉறுதி?” என்றும் கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார்.மாணவியின் இந்த அதிரடியான கேள்வியால், திகைத்துப் போன போலீஸ் எஸ்.பி. கவுதம், பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளார். இதைப் பார்த்த சக பள்ளி மாணவிகள், கேள்விகேட்ட தங்களின் தோழியை பாராட்டி நீண்டநேரம் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.