புதுதில்லி:
பயங்கரவாத குற்றம்சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் பாஜக வேட்பாளராக களமிறக்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசு தலைவர், தலைமை தேர்தல் ஆணையருக்கு விமன் இந்தியா மூமெண்ட் புகார் மனு கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக விமன் இந்தியா மூவ் மெண்ட் தேசிய தலைவர் மெஹ்ருன்னிசா கான் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது;
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாத குற்றம்சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் என்ற விசாரணைக் கைதியை, போபால் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக தனது வேட்பாளராக அறிவித்திருக்கிறது. தனது உடல்நிலையை காரணமாகக் கொண்டு பிணையில் வெளியே வந்த ஒருவரை, இன்றுவரை மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றமற்றவராக நிரூபிக்கப்படாத ஒருவரை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதும், ஏற்றுக்கொள்ள முடியாத செயலுமாகும்.
பெண் குலத்துக்கு தலைக்குனிவு
மனிதகுலத்தைச் சீரழிக்கும் இத்தகைய ஈவு இரக்கமில்லாத தீவிரவாதியை ஆளும்கட்சி பாஜக வெளிப்படையாக ஆதரிப்பதும், அவரின் குற்றப்பின்னணியைப் புறந்தள்ளி மறைப்பதும் நீதிக்குப் புறம்பானதாகும்.சாத்வி பிரக்யா சிங் தாக்கூரின் கொடுஞ்செயல் பெண் குலத்தையே தலைக்குனிவுக்கு ஆளாக்கிவிட்டது.
யாகூப் மேமனும்... பிரக்யா சீங்கும்...
குண்டுவெடிப்புக் குற்றத்திற்காக யாகூப் மேமன் தூக்கிலேற்றப்பட்ட நாட்டில், அதே குற்றத்தைப் புரிந்த சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் சுதந்திரப் பறவையாக சுற்றித்திரிவது ஏற்புடையதுதானா? என்ற கேள்வி எழுகிறது. நாட்டிற்காக விசுவாசமாக உழைத்து நாட்டை தீவிரவாதிகளிடமிருந்து காக்க உயிர்நீத்த அதிகாரி ஹேமந்த் கர்கரேவை தீவிரவாதி என்று சாத்வி பழித்துரைப்பது ஏற்புடையதுதானா? நாட்டைக் காக்க உயிர்த்தியாகம் செய்த கர்கரே ஒரு தீவிரவாதி என்பதும், நாட்டைச் சீரழிக்க குண்டுகளை வெடித்த சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் ஒரு தேசியவாதி என்பதும் வெறுப்புக்குரியது அல்லவா? இத்தகைய தீவிரவாதச் செயலில் ஈடுபட்ட குற்றவாளி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவதை விமன் இந்தியா மூமெண்ட் கடுமையாக எதிர்க்கிறது. இந்திய குடியரசு தலைவரும், இந்திய தலைமை தேர்தல் ஆணையரும் இதை தீவிரமாக ஆராய்ந்து தகுந்த முடிவை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.