புதுதில்லி:
நாட்டில் பல்வேறு வகையான இடர்பாடுகள் ஏற்படும் போது, மக்களுக்கு உதவி செய்வதற்கு, பிரதமர் தேசிய நிவாரண நிதியம் (Prime Minister’sRelief Fund - PMRF) என்ற அமைப்பு இருக்கிறது. நிறுவனங்கள், அமைப்புக்கள், தனிநபர்கள் இந்த அமைப்புக்கு வரும் நிதி, பிரதமர் அலுவலகம் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடையும்.இதற்கான வரவு - செலவுக் கணக்கு அரசால் பராமரிக்கப்படும் என்பதுடன், மத்திய தலைமைக் கணக்கு அதிகாரியின் தணிக்கைக்கும் உட்படுத்தப்படும். இதுதான் இவ்வளவு காலமும் இருந்த நடைமுறை. ஆனால், மத்திய பாஜக அமைச்சரவையானது, கொரோனாவையொட்டி திடீரென பிரதமரின் அவசரகாலச் சூழ்நிலை குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதியம் (The Prime Minister’s CitizenAssistance and Relief in Emergency SituationsFund- PM CARES FUND) என்ற நிதியமைப்பை, கடந்தமார்ச் 28-ஆம் தேதி அவசர அவசரமாக உருவாக்கியது. மேலும் இந்த அமைப்புக்கு பிரதமர் மோடி தலைவராகவும், மூத்த அமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் நியமித்துக் கொள்ளப்பட்டனர்.
அப்போதே, பிரதமர் நிவாரண நிதியம் என்ற பொது அமைப்பு இருக்கும்போது, புதிதாக இந்தஅமைப்பு எதற்கு? என்ற கேள்விகள் எழுந்தன. இடதுசாரிக் கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் இதுதொடர்பாக கேள்விகளை எழுப்பினர். ‘பிஎம் கேர்ஸ் நிதி’ வரவு - செலவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றம் சாட்டினர்.சத்தீஸ்கர் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல்,தனது மாநிலத்தில் முதல்வர் நிவாரண நிதிக்கு வந்த நன்கொடை எவ்வளவு? அதில் எவ்வளவு செலவிடப்பட்டு உள்ளது? என்று பகிரங்கமாக அறிவித்தார். இதுபோல் பிரதமர் மோடி வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? என்ற நிர்ப்பந்தத்தை அவர்அளித்தார்.ஆனால், இவை எதற்கும் பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை. ‘பிஎம் கேர்ஸ்’ நிதியத்திற்கு வந்த பணத்திலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சுமார்50 ஆயிரம் வெண்டிலேட்டர்களை வாங்கப் போகிறோம் என்று வேறொரு பதிலைக் கூறினார்.
குஜராத்தில் பாஜக தலைவர்களுக்கு நெருக்கமான தனியார் முதலாளிகள் ஒருவர், ராஜ்கோட்டைச்சேர்ந்த பராக்கிரம் சிங் ஜடேஜா. பிரதமர் மோடியின்10 லட்ச ரூபாய் கோட்டை ஏலத்தில் எடுத்தவர்களின் தொழில் கூட்டாளி என்று கூறப்படுபவர். குஜராத் பாஜக முதல்வரான விஜய் ரூபானியின் நெருங்கிய நண்பர். இவரது ஜோதி சிஎன்சி ஆட்டோமேஷன் நிறுவனத்திடமிருந்து குஜராத் அரசு அண்மையில் 900 போலி வெண்டிலேட்டர்களை வாங்கி, சிக்கலில் மாட்டிக் கொண்டது. அப்போது குஜராத் அரசு மட்டுமன்றி, மத்தியஅரசும் 5 ஆயிரம் ஜோதி சிஎன்சி வெண்டிலேட்டர் களுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாகவும், ‘பிஎம் கேர்ஸ்’ நிதியிலிருந்தே இதற்கான பணம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த முறையும் மத்திய அரசிடமிருந்து பதிலில்லை.
மாறாக ‘பிஎம் கேர்ஸ்’ நிதி விவகாரங்கள் மர்மமாக இருக்கின்றன என்று டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்ததற்காக, தனிநபர் ஒருவரின் புகாரின் பேரில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது கர்நாடக மாநிலத்தில் எப்.ஐ.ஆர். பதிவுசெய்யப்பட்டது.தற்போது அதே கர்நாடக மாநிலத்திலிருந்தே, மாணவர் ஒருவர் ‘பிஎம் கேர்ஸ் நிதியம்’ குறித்தமர்மத்தை தோண்டித் துருவியுள்ளார். பெங்களூரு அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் சட்ட மாணவராக இருக்கும் ஸ்ரீஹர்ஷா கந்துகுரி என்பவர். ‘பிஎம்கேர்ஸ் நிதி’யத்தின் உடன்படிக்கை பத்திரம், அனைத்து அரசு உத்தரவுகள், அறிவிக்கைகள், சுற்றறிக்கைகள் ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) விண்ணப்பித்திருந்தார்.அதுவும் இப்போதல்ல. ‘பிஎம் கேர்ஸ்’ உருவாக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்த விண்ணப் பத்தை அனுப்பி விட்டார். ஆனால் இவரது விண் ணப்பத்துக்கு 30 நாட்களாக எந்த ஒரு பதிலும் அளிக்கப்படவில்லை.ஸ்ரீஹர்ஷா கந்துகுரியும் விடுவதாக இல்லை. அவர் மேல்முறையீட்டுக்குப் போனார். இதனால் வேறுவழியின்றி, பிரதமர் அலுவலகத்தின் தகவல் அதிகாரி, கந்துகுரிக்கு மே 29-ஆம் தேதி பதில் அனுப்பியுள்ளார்.
அதில், “தகவலுரிமைச் சட்டம், 2005 பிரிவு 2 எச்-இன் படி பொது அதிகாரத்தின் கீழ் ‘பிஎம் கேர்ஸ்நிதியம்’ வராது. வேண்டுமானால் இது தொடர்பானவிவரங்களை pmcares.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என்று மட்டும் கூறி, கந்துகுரி கேட்ட விவரங்களை அளிக்க மறுத்துள்ளார்.ஏற்கெனவே வழக்கறிஞர் அபய் குப்தா என்பவர், கேள்வி எழுப்பிய போதும், இதே பதிலையே பிரதமர் அலுவலகம் கூறியிருந்தது. தற்போது கந்துகுரி மனு மூலம் பிஎம் கேர்ஸ் நிதி வசூலின் மர்மம் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
“பொது அதிகாரம் (Public Authority) என்பதற்கு ஆர்டிஐ சட்டத்தில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ‘எந்த ஒரு அமைப்போ, அரசோ, அரசு சாராததோ எதுவாக இருந்தாலும், நிதி பெறுவது அல்லது அரசிடமிருந்து நிதி பெறுவது, அரசு அல்லது அரசுசாராத அமைப்பு நிதி அளிப்பது’ என்று எதுவாக இருந்தாலும் அது பொது அதிகாரத்தின் கீழ் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி பிஎம் கேர்ஸ் நிதியத்தின் பெயர்,அமைப்பின் கட்டமைப்பு, கட்டுப்பாடு, சின்னத்தின் பயன்பாடு, அரசு பண்புரிமைப் பெயர் ஆகிய அனைத்தும் அரசு தொடர்புடையதாக இருக்கும் போது, இது பொது அதிகாரத்தின் கீழ் வராது என்று எவ்வாறு கூற முடியும்..?” என்று கந்துகுரி கேள்விஎழுப்பியுள்ளார்.“அமைப்பு பிரதமரின் பெயரால் உருவாக்கப் பட்டுள்ளது. மக்களுக்கானது என்று அறிவிக்கப் பட்டுள்ளது. பிரதமர் தலைவராகவும், மூன்று அமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் இந்த அறக்கட்டளையில் இடம்பெற்றுள்ளனர். இது எல்லாமே இது பொது அமைப்பு என்பதைத்தானே நிரூபிக்கின்றன” என்றும் கந்துகுரி குறிப்பிட்டுள்ளார்.