கொச்சி
கொச்சி சர்வதேச விமான நிலையம் லிமிடெட் (சியால்) 2019-2020 நிதி ஆண்டில் ரூ.204.05 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்ததுடன் முதலீட்டாளர்களுக்கு 27 சதவிகிதம் ஈவுத்தொகையும் வழங்கி வளர்ச்சியை நிரூபித்துள்ளது என நிறுவனத்தின் தலைவரான கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். அரசின் மேற்பார்வையின் கீழ் விமான நிலையத்தின் வளர்ச்சி வெற்றிகரமாக இருக்க முடியும் என்பதையும், தனியார் ஏகபோகங்களை நம்ப வேண்டிய அவசியமில்லை என்பதையும் நிரூபித்துள்ளது என அவர் கூறினார்.
சியால் நிறுவனத்தின் 26 ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம். முதலீட்டாளர்களின் வருடாந்திர கூட்டம் கோவிட் நெறிமுறைக்கு ஏற்ப ஆன்லைனில் நடைபெற்றது. கூட்டத்தை துவக்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது: விமான நிலையத்தை நடத்துவதற்கு தனியார் ஏகபோகங்களை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே வளர்ச்சி சாத்தியம் என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால் விமான நிலையத்தை நிர்மாணிப்பதும் வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதும் அரசாங்கத்தின் மேற்பார்வையில் வெற்றிகரமாக மேற்கொள்ளலாம் என்பதை சியால் நிரூபிக்கிறது. உள்ளூர் மக்களின் மண்ணையும் மனதையும் கையகப்படுத்துவதன் மூலம் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றை முழுமையாக தனியார்மயமாக்க முடியாது. சியால் பாணி வளர்ச்சியானது மக்களின் மண்ணையும் மனதையும் ஈர்க்க முடியும்.
12,000 பேருக்கு வேலை 19,000 முதலீட்டாளர்கள்
2016 இல் இந்த இயக்குநர்கள் குழு பொறுப்புக்கு வந்தபோது, கொச்சி விமான நிலையத்தில் 7,000 பேர் பணியாற்றினர். மார்ச் 2020 க்குள் இது 12,000 ஆக வளர்ந்தது. சியால் கடந்தநான்கரை ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை முடித்துள்ளது. இருப்பினும், பயணிகளிடமிருந்து ஒரு ரூபாய் கூட பயனர் கட்டணமாக வசூலிக்கப்படுவதில்லை என்று முதல்வர் கூறினார். விமான நிலையத்தில் உள்ள சூரிய மின் நிலையங்களின் திறன் 15.5 மெகாவாட்டிலிருந்து 40 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. சியால் பயனூரில் அமைக்கவுள்ள 12 மெகாவாட் சூரிய மின் நிலையமும், கோழிக்கோடு அரிப்பாராவில் 4.5 மெகாவாட் நீர்மின் திட்டமும் இந்த ஆண்டு இறுதிக்குள் இயக்கப்படலாம் என்றார். சியாலில்30 நாடுகளைச் சேர்ந்த 19,000 முதலீட்டாளர்கள் உள்ளனர்.2019-20 நிதியாண்டில், சியால் மொத்த வருமானம் ரூ.655.05 கோடி ஈட்டியது. லாபம் ரூ.204.05 கோடி. நிறுவனத்தின் வரலாற்றில் முதல் முறையாக லாபம் ரூ .200 கோடியைத் தாண்டியுள்ளது. பங்குதாரர்கள் 27 சதவிகிதம் ஈவுத்தொகையைப் பெறுவார்கள். இதன் மூலம், 2003-04 முதல் செலுத்தப்பட்ட மொத்த ஈவுத்தொகை 282 சதவீதமாக உயர்ந்துள்ளது. சியாலில் மாநில அரசு மற்றும் கேரள பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த பங்கு 34.15சதவிகிதமாகும். இதுவரை, அரசு / பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டும் ஈவுத்தொகையாக ரூ.368.46 ரூபாய் சியாலில் இருந்து திரும்ப கிடைத்துள்ளது என்றார்.