புதுதில்லி:
உபா சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.இந்தியாவின் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் (உபா) 1967-ன் கீழ், ஒரு இயக்கத்தை மட்டுமே பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க வழி இருந்தது. இதில் மத்திய அரசு முக்கிய திருத்தங்கள் செய்து, கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.இந்த புதிய உபா சட்டத்தின்படி, தனி நபரையும் பயங்கரவாதியாக அறிவித்து, பயணத்தடை, சொத்துக்கள் பறிமுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முடியும்.இந்நிலையில், உபா சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை எதிர்த்து சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் மற்றும்சாஜல் அவஸ்தி ஆகியோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. அந்த மனுக்களில், மக்களின்அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் செய்யப்பட்டுள்ள இந்த சட்டத் திருத்தங்கள் அரசியலமைப்புக்கு விரோதமானவை என்று உத்தரவிடும்படி கூறப்பட்டுள்ளது.இந்த மனுக்கள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்களின் மனுவிற்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.