tamilnadu

img

தில்லி எப்.எம்.கோல்டை 24 மணிநேர செய்தி அலைவரிசையாக மாற்றியதை ரத்து செய்க.... மத்திய அமைச்சருக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., கடிதம்

புதுதில்லி:
தில்லி எப்.எம். கோல்ட் அலைவரிசை ஒலிபரப்பை, மத்திய அரசு திடீரென்று நூறுசதவீத அளவிற்கு 24x7 செய்தி அலைவரிசையாக மாற்றியிருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்றும், மீண்டும் அதனை பழையபடியே எப்.எம். கோல்ட் அலைவரிசையாக மாற்றி அதில் பணியாற்றிய 80 கேசுவல் ஊழியர்களுக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:மத்திய அரசு, எப்.எம்.கோல்ட் அலைவரிசை, கலாச்சார மற்றும் கஜல் பாடல்கள்ஆகியவற்றை ஒலிபரப்பி வந்தது. இவற்றை அனைத்து வயதினரும் மிகவும் ஆர்வத்துடன் கேட்டு வந்தனர். கலாச்சாரத்தின் பல்வேறு வடிவங்களையும் இது ஒலிபரப்பிவந்தது. நம் நாட்டின் கலை, கலாச்சாரம் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாத்திடும் விதத்திலும், பரப்பிடும் விதத்திலும்செயல்பட்டு வந்தது. இதனால் தனியார் அலைவரிசைகள் இதனுடன் போட்டிபோட முடியாமல் மிகவும் திணறின.

இந்நிலையில் இது திடீரென்று 100 சதவீதம் 24x7 செய்தி அலைவரிசையாக மாற்றப்பட்டுவிட்டது. இதனால் இதில்பணியாற்றி வந்த ஊழியர்கள் (இவர்களில் அதிகமானவர்கள் பெண்கள்) வேலையிழந்துள்ளனர்.இந்தப் பிரச்சனையில் தாங்கள் தனிக்கவனம் செலுத்தி, இந்த அலைவரிசையை மீண்டும் எப்.எம்.கோல்ட் அலைவரிசையாக மாற்றி, பணியிழந்தவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். (ந.நி.)