tamilnadu

img

இ.எம்.ஐ.கடனை செலுத்தாதவர்களின் வங்கிக் கணக்குகளை வராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது.... உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி:
இ.எம்.ஐ. காலத்தில் கடன் தொகையை செலுத்தாதவர்களின் வங்கி கணக்குகளை வராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் ஊரடங்கால் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், சிறு குறு தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. மக்கள் வேலை,வருமானமின்றி பெரும்அவதிப்பட்டனர்.  ஏராளமானோர் வேலையிழந்தனர். மத்திய அரசின் நிவாரண நடவடிக்கை பெயரளவில்தான் இருந்தது என்று அரசியல் கட்சியினர் மற்றும் மக்கள் குற்றம்சாட்டினர். இத்தகைய நெருக்கடியான சூழலில் வங்கியில் வாங்கிய கடனுக்கான மாதத் தவணை(இ.எம்.ஐ.) செலுத்துவது மக்களுக்கு மற்றொருசுமையாக மாறியது. இந்நிலையில் ரிசர்வ் வங்கிகடந்த மார்ச் மாதம்  வெளியிட்ட அறிவிப்பில்,  இ.எம்.ஐ. செலுத்துவதற்கும் வீடு, கார்,உள்ளிட்ட வங்கிக்கடன்களை செலுத்து வோருக்கு மூன்று மாதம் காலநீட்டிப்பு தரப்பட்டது.

அதே நேரத்தில் ஒத்திவைக்கப்படும் காலத்தில் செலுத்தவேண்டிய நிலுவை தொகைக்கு வட்டி மேல் வட்டி போட்டு வங்கிகள் மற்றும்கடன் அளிக்கும் நிறுவனங்கள் வசூல் செய்வதாக உச்சநீதிமன்றத்தில் சில வழக்குகள் தொடரப்பட்டன.அந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் பேரிடர் மேலாண்மை சட்டத்தைப் பயன்படுத்தி இ.எம்.ஐ. தள்ளுபடி அல்லது காலக்கெடு நீட்டிப்பு மற்றும் இ.எம்.ஐ. தொகை மீதான வட்டி வசூலிப்பதை தடை செய்வது உள்ளிட்ட முடிவுகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று  அறிவுறுத்தியது. 

ஆனால் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அவதிப்படும் மக்களைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் மத்திய அரசு,வழக்கின் விசாரணை கடந்த வாரம் நடைபெற்ற போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டி செலுத்தும் நடைமுறையை ரத்து செய்ய முடியாது என்றும் கடனை செலுத்துவதற்கான அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மத்திய அரசின் இந்த அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியளித்தது.அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இ.எம்.ஐ. கடன் தொகையை செலுத்தாதவர்களின் கணக்குகளை மறு உத்தரவு வரும் வரை வராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று  உத்தரவிட்டனர். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை  செப்டம்பர் 10 வியாழனன்று நடைபெற்றது. அப்போது மத்தியஅரசு சார்பில் இ.எம்.ஐ. வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் முடிவெடுக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசுக்கு இரண்டு வாரம் அவகாசத்தை நீதிபதிகள் அளித்தனர். வழக்கின் விசாரணை செப்டம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.