புதுதில்லி,ஆக.27- அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்ட உள் இடஒதுக்கீடு செல்லும் என்றும் உச்சநீதி மன்றம் ஆகஸ்ட் 27 வியாழனன்று முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை அருந்த தியர் மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன. உள் ஒதுக்கீடு கோரி அருந்ததியர் மக்கள் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அருந்ததியர் மக்களுக்கு உள் இடஒதுக்கீடு கோரி தொடர்ச்சியான பிரச்சாரம் மற்றும் போராட்டங் களை நடத்தியது. 2007ஆம் ஆண்டில் அருந்ததியர் உள்ஒதுக்கீடு கோரிக்கை பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. பேரணியின் முடிவில் அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் மற்றும் தலைவர்கள் அருந்ததியர் மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தனர்.
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பட்டியல் இனத்தாருக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் சட்டம் கடந்த 2009ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்காலத்தில் தமிழக சட்டமன்றத்தில்நிறைவேற்றப்பட்டது. அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டமுன்வடிவை சட்டமன்றத்தில் அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2015 ஆம் ஆண்டு வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டனர். அதைத்தொடர்ந்து, இந்த மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றன.இந்நிலை யில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமை யிலான இந்திரா பானர்ஜி, வினீத் சரண், எம்.ஆர்.ஷா, அனிருதா போஸ் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஆகஸ்ட் 27 வியாழனன்று தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. பட்டியல் இனத்துக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததிய மக்களுக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு செல்லும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
உள்ஒதுக்கீடு முறை செல்லாது என கடந்த 2004 ஆம் ஆண்டு 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆகையால் இந்த வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்து அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், “பட்டியல் வகுப்புகளின் உட்பிரிவில் உள்ள வர்களுக்கு முன்னுரிமை தரும் சட்டங்களை இயற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களை மறுக்கக் கூடாது” என்ற கருத்தையும் நீதிபதிகள் முன்வைத்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் தமிழகத்தில் தற்போது அருந்ததியருக்கு 3 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க தடை எதுவும் இல்லை. 7 நீதிபதிகள் கொண்டஅமர்வில், இந்த வழக்கு புதிதாக விசாரிக்கப்பட்டு புதிய தீர்ப்பு வெளியாகும். அது வரை உள்ஒதுக்கீடு தடையின்றி தொடரும். தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு அருந்ததியர் மக்களுக்கு தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள உள் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கு மாநில அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்கிறது. பட்டியல் இனத்தில் உள்ள பல்வேறு சமூகப் பிரிவினரோடு அருந்ததியர் மக்கள் போட்டியிட்டு தங்களுக்கு உரிய நியாயமான ஒதுக்கீட்டு உரிமை களை பெறமுடியாத நிலைமையில்தான் இந்த போராட்டத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன்னெடுத்தது. இதே காலத்தில் உள்ஒதுக்கீடு கோரி போராடி வந்த அனைத்து அருந்ததியர் இயக்கங் களோடும் ஒன்றிணைந்து விரிவான போராட்ட மேடை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதனுடைய அன்றைய மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் அவர்களின் பங்களிப்பும் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கான போராட்ட வரலாற்றில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும். இந்த உள் இட ஒதுக்கீட்டிற்கு நீதிமன்றத்தின் வழியாக தடை ஏற்படுத்த முனைந்த போதெல்லாம் அதற்கு எதிராக தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனது பங்கை செலுத்தியது. உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் உச்ச நீதிமன்றத்திலும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தன்னையும் இணைத்துக் கொண்டு போராடியது. இந்த போராட்டத்தில் உதவிய வழக்கறிஞர்கள் சமூக நீதியில் அக்கறை உள்ள அனைவருக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனது நன்றியை உரித்தாக்குகிறது. உள் இட ஒதுக்கீடு தமிழகத்தில் நடைமுறையில் இருந்தாலும் கூட உள் இட ஒதுக்கீட்டை செயல் படுத்துவதில் அக்கறையற்றதன்மையே இருக்கிறது. எனவே தீர்ப்பு வந்திருக்கக்கூடிய பின்னணியில் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை யும், மற்றும் பட்டியலினத்தவர், பட்டியல் பழங்குடி யினர் ஆகியோர்களின் பின்னடைவு காலி பணியிடங்களை சிறப்பு பணி அமர்த்தல் மூலமாக நிரப்பிட வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு |
தமிழகத்தில் அருந்ததியர் மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள் ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அருந்ததியர் மக்களுக்கு மூன்று சதமான உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வெளியிட்டுள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்பதுடன் இதன் மூலம் அருந்த தியர் மக்களது கல்வி, வேலை வாய்ப்பு களுக்கு உத்தரவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பட்டியலின மக்களில் ஒரு பகுதியினராக உள்ள அருந்ததிய சமூகப் பிரிவினர், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தங்களுக்கான உரிய ஒதுக்கீட்டை பெற முடியாத நிலை இருந்து வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழகம் முழுவதும் மேற்கொண்ட கள ஆய்வு இதனை பகிரங்கமாக வெளிப்படுத்தியது. இந்த நியாயத்தை வலியுறுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2006 செப்டம்பர் 17ஆம் தேதியன்று விருது நகரில் அருந்ததியர் மக்களின் உள் இட ஒதுக்கீடு கோரிக்கை மாநாட்டை நடத்தியது. விருதுநகரை தொடர்ந்து திருநெல்வேலி, திண்டுக்கல், சாயல்குடி, அவிநாசி, சங்ககிரி, புதுச்சேரி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு கோரிக்கை மாநாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி சென்னையில் 25 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அருந்த தியர் உள் இட ஒதுக்கீடு கோரிக்கைப் பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. அப்பேரணியின் போதே அன் றைய தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச்செயலாளர் என். வரதராஜன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அருந்ததியர் உள்ஒதுக் கீட்டை கொள்கை ரீதியாக ஏற்பதாக தமிழக முதல்வர் அறிவித்தார். தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஜனார்த்தனன் குழுவை அமைத்து முழு விவரங்களையும் பரிசீலித்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அக்குழுவும் இக்கோரிக்கைகளின் நியாய த்தை அங்கீகரித்து முதல்வருக்கு அறிக்கை சமர்ப்பித்தது. இதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட்ட அனைத்து கட்சிக்கூட்டத்தில் அங்கீகாரமும் பெறப்பட்டது. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு, 2009 ஆம் ஆண்டு அருந்ததிய மக்களுக்கு 3 சதமான உள்ஒதுக்கீடு செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கினை ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நிலையில் மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் உள்ஒதுக்கீடு செல்லும் எனவும், மாநில அரசுக்கு அதற்கான அதிகாரம் உள்ளது எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் இப்போது கிடைத்துள்ள வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது என சுட்டிக் காட்டுகிறோம். இந்த வெற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்திய தொடர்ச்சியான போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |