tamilnadu

img

வெறுப்பை உமிழ்பவர்களைக் கைது செய்க: சிபிஎம்

புதுதில்லி:
மக்களுக்கு எதிராக மதவெறி வெறுப்பை உமிழ்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தலைநகர் தில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நடைபெற்றுள்ள நிகழ்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. போலீசார் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டிருந்தபோதிலும், அவர்களுக்கு முன்னால் நின்றுகொண்டே ஒருவன் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால், ராஜ்கட் நோக்கிப்பேரணியாகச் செல்வதற்காக நின்று கொண்டிருந்த  ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது சுட்டிருக்கிறான். இதில் ஒரு மாணவருக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது. சுட்டவன் சங் பரிவாரத்தைச் சேர்ந்த கிரிமினல் பேர்வழி என்று உறுதியாகி இருக்கிறது.

கிளர்ச்சியில் ஈடுபடுகிறவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என்றும்அவர்கள் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்றும் மோடி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான அனுராக்தாகூர் என்பவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய பேச்சு மற்றும்  அமித் ஷாதலைமையிலான பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் பலர் வன்முறையைத்தூண்டும் விதத்தில் மதவெறி வெறுப்புப் பேச்சுக்களை உமிழ்ந்துகொண்டிருப்பதன் நேரடி விளைவே மேற்படி நபர் பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொண்டதற்குக் காரணமாகும். அமைதியாகக் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு காவல் நிலையங்களில் இருத்தி வைக்கப்படும் அதே சமயத்தில், இவ்வாறு வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய, தில்லி எம்பி பர்வேஷ் வர்மா உட்பட அனுராக் தாகூர் மற்றும் பாஜக தலைவர்கள் மீது ஒரு முதல் தகவல் அறிக்கை கூட பதிவுசெய்யப்படாததிலிருந்தே, வன்முறையைத் தூண்டுபவர்களுக்கு ஆட்சியாளர்களின் அரவணைப்பு இருந்து வருகிறது என்கிற உண்மை நன்கு வெளிப்படுகிறது.

‘இந்து சேனை’ என்னும் அமைப்பு, தலைநகரில் ஷாஹீன் பாக் மற்றும் பல இடங்களில் நடைபெற்று வரும் கிளர்ச்சிப் போராட்டங்கள் மீது பிப்ரவரி 2 அன்று தாக்குதல் தொடுத்திட வேண்டும் என்று வெளிப்படையாகவே அறைகூவல் விடுத்து, விளம்பரங்கள் ஒட்டியுள்ளபோதிலும், அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது, அதிர்ச்சி அளிக்கிறது.நடைபெறவிருக்கும் தில்லி தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்க இருக்கும் பாஜக, மதவெறித் தீயைக் கூர்மைப்படுத்திட வேண்டும் என்றுமிகவும் ஆபத்தான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இதனையொட்டி  குடியுரிமைத் திருத்தச் சட்டம்-தேசிய குடியுரிமைப் பதிவேடு-தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது ஆத்திரமூட்டும் விதத்தில் மதவெறி வெறுப்புப் பேச்சுக்களை பாஜகவினர் உமிழ்ந்து வருகிறார்கள்.  வெறுப்பை உமிழ்ந்து பேசிய அனுராக் தாகூர், பர்வேஷ் வர்மா ஆகியோர்மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய வேண்டும், உள்துறை அமைச்சரின் வெறுப்பை உமிழும் பேச்சுக்களுக்கு எதிராக  தேர்தல் ஆணையம் அவருக்கு அறிவிப்பு அனுப்பிட வேண்டும், இந்து சேனைக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுத்திட  வேண்டும். பாஜகவின் வெறுப்பைக் கக்கும் பேச்சுக்களால் ஆத்திரப்பட வேண்டாம்என்றும் தலைநகரில் மத நல்லிணக்கத்தையும், அமைதியையும் நிலைநாட்டிட அவர்கள் படுதோல்வி  அடைவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்என்றும் தில்லிவாழ் மக்களை அரசியல் தலைமைக்குழு கேட்டுக்கொள்கிறது.       (ந.நி.)