புதுதில்லி:
தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக மோசமான அளவிற்கு சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், பாஜக தலைவர் ஒருவர், அதற்கான பழியைத் தூக்கி பாகிஸ்தான், சீன நாடுகள் மீது போட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த வினித் அகர்வால் ஸ்ரத்தா என்ற பாஜக தலைவர்தான் இவ்வாறு கூறியுள்ளார்.“இந்தியாவைப் பார்த்து பாகிஸ்தானும், சீனாவும் அஞ்சுகின்றன. இதனால் நம் நாட்டிற்குள் பாகிஸ்தான் நச்சு வாயுவை அனுப்பிவைத்து தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் காற்றை மாசுபட வைக்கிறது.இதனை மத்திய அரசு மிகவும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். இதுவரை இந்தியாவுடன் தொடுத்த போர் அனைத்திலும் பாகிஸ்தானுக்கு தோல்வியே கிடைத்துள்ளது.பிரதமராக நரேந்திர மோடியும், அமித்ஷாவும் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தது முதல் பாகிஸ்தானுக்கு சிக்கல் உருவாகி உள்ளது. இது தெரியாமல் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த மாசுக்கள் ஏற்பட விவசாயிகள் வயல்வெளியை எரிப்பதே காரணம் எனத் தவறாக எண்ணி வருகிறார்” என்று வினித் அகர்வால் கூறியுள்ளார்.