நாட்டின் ஜனநாயகத்தை திரும்ப பெற மக்கள் ஒன்றுகூட வேண்டும் என தில்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் தனது நண்பரான பிரபல முற்போக்கு எழுத்தாளர் கௌரிலங்கேஷ் பெங்களூரில் இந்துமத தீவிரவாத அமைப்புகளால் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து தீவிர அரசியல் இறங்கியுள்ளார். தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகவும் போட்டியிட்டுள்ளார்.
அவர் இன்று தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, நாட்டின் ஜனநாயகத்தை திரும்ப பெற வெவ்வேறான அடையாளம் கொண்ட மக்கள் தற்போது நாட்டின் மீதுள்ள அக்கறையில் ஒன்று கூட வேண்டும் என்பதைத்தான் நான் விரும்புகிறேன். ஆம் ஆத்மியின் சுகாதாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கான வேலைதான் தற்போது என்னை இங்கு அழைத்து வந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் கிழக்கு தில்லி மற்றும் புதுதில்லி தொகுதிகளில் நாளை பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.