tamilnadu

img

தொழிலாளர் நலச் சட்டங்களில் கொடூர திருத்தம் மே 22 அகில இந்திய எதிர்ப்பு தினம் மத்தியத் தொழிற்சங்கங்கள் அறைகூவல்

புதுதில்லி, மே 17- சமூக முடக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு, மத்திய  அரசு தொழிலாளர் நலச் சட்டங்களை, முதலாளிகள் நல சட்டமாகவும், தொழிலாளர் விரோத சட்டமாகவும் மாற்றி யிருப்பதற்கு எதிராக வரும் மே 22 அன்று அகில இந்திய எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்குமாறு மத்தியத் தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. மத்தியத் தொழிற்சங்கங்கள் சார்பில் விடுக்கப் பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடையின் கூட்டம் நடைபெற்றது. சமூக முடக்கத்தைத் தொடர்ந்து, நாட்டில் தொழிலாளர் வர்க்கத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்ச னைகள் குறித்து விவாதித்தது. அதனைத் தொடர்ந்து சவால்களை எதிர்கொள்வதற்காக, ஒன்றுபட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தீர்மானித்தது. மத்திய அரசு, கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றைப் பயன்படுத்திக்கொண்டு, நாட்டிலுள்ள தொழி லாளர் வர்க்கத்திற்கு எதிராகவும், சாமானிய மக்களு க்கு எதிராகவும் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு விதத்தில் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது.

உழைக்கும் மக்களின் பெரும்பாலானவர்கள் வேலை யிழப்புகள் காரணமாகவும், ஊதிய இழப்புகள் காரண மாகவும், பாதிக்கப்பட்டு சொல்லொண்ணா துன்ப துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். சமூக முடக்கத்தின் கடந்த 50 நாட்களில், மத்திய அரசு தொழிலாளர் களைக் கிட்டத்தட்ட அடிமை நிலைக்கு மூர்க்கத்தனமான முறையில் தள்ளிக்கொண்டிருக்கிறது. வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களை நோக்கி பலநூறு மைல்கள் நடந்தே செல்லும் அவல  நிலை ஏற்பட்டுள்ளது. போகும்வழியில் பசிக்கொடுமை, சோர்வு மற்றும் விபத்துக்களின் காரணமாக உயிரி ழப்புகளும் ஏராளமாக ஏற்பட்டுள்ளன. இவ்வாறு கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளபோதிலும், மத்திய அரசு இதுவரையிலும் தொழிலாளர்களைப் பாது காப்பதற்கான நடவடிக்கை எதையும் எடுத்திடவில்லை.  

தொழிலாளர்களைப் பாதுகாத்திட நடவடிக்கை எதுவும் எடுக்காதது மட்டுமல்லாமல், இப்போது சமூக முடக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு, உழைக்கும் மக்கள் உரிமைகளையும், தொழிற்சங்கங்களின் உரிமை களையும் நசுக்கிடவும் நடவடிக்கைகள் எடுத்து வரு கிறது. பாஜக மாநில அரசாங்கங்களையும், தங்கள் கட்டளைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அடிமை போல் செயல்படும் அரசாங்கங்களையும் தொழிலாளர் விரோத சட்டங்களைக் கொண்டுவர ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக பல்வேறு அறிவுரைகள் மாநில அரசாங்கங்களுக்கு மத்திய தொழிலாளர் துறையால் அனுப்பப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநில அரசு கொண்டுவந்துள்ள 2020ஆம் ஆண்டு அவசரச் சட்டம், சில தொழிலாளர் சட்டங்களுக்கு தற்காலிக விலக்கு அளித்திருக்கிறது. இதன்மூலம் 36 சட்டங்களுக்கு 1000 நாட்கள் செயல்படாது முடக்க கட்டளை பிறப்பித்திருக்கிறது.

இவற்றை ஒதுக்கி விட்டோமானால் மீதியுள்ளது ஊதியங்கள் அளிப்புச் சட்டம், கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம், கொத்த டிமைத் தொழிலாளர் சட்டம், இழப்பீடு சட்டம் மட்டுமே யாகும். செயல்படாத சட்டங்களாக மாற்றப்பட்டுள்ள வைகள் என்பவை, தொழிற்சங்க சட்டம், தொழிற் சாலைகள் சட்டம், வேலைபார்க்கும் இடங்களில் பாது காப்பு மற்றும் சுகாதாரம் சட்டம், மாநிலங்களுக்கிடை யேயான புலம்பெயர் தொழிலாளர் சட்டம், சம ஊதிய சட்டம், மகப்பேறு பயன்பாடு சட்டம் முதலானவை களாகும். மத்தியப் பிரதேசமும், முதலாளிகள் தொழிலாளர் களை தங்கள் இஷ்டம்போல் வேலைக்கு வைத்துக்கொண்டு, பின் கருவேப்பிலையைத் தூக்கி  எறிவதுபோல் தூக்கி எறியக்கூடிய விதத்தில் தொழிற் சாலை சட்டம், ஒப்பந்த சட்டம், தொழில் தகராறு சட்டம் ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஒப்பந்தக்காரர்கள் 49 பேர்கள் வரை எவ்விதமான உரிமமும்இன்றி ஆட்களை ஒப்பந்தம் செய்து கொள்ள வகை செய்யப்பட்டிருக்கிறது.

எனவே இவர்களுக்கு எவ்விதமான முறைப்படுத்தலோ அல்லது கட்டுப்பாடோ கிடையாது. தொழிற்சாலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது என்பது அநேகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டது. அதுமட்டுமல்ல, முதலாளிகள் ஒவ்வொரு தொழிலாளருக்கும் தொழிலாளர் நல  வாரியத்திற்கு ஆண்டுக் கட்டணமாக 80 ரூபாய் அளித்து வந்ததும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், காலை 6 மணியிலிருந்து இரவு 12 மணி வரை (இதன் பொருள் ஒரே நாளில் 18 மணி நேரம்) வேலை செய்யக்கூடிய விதத்தில் திருத்தப்பட்டிருக்கிறது. குஜராத் அரசாங்கமும் தொழிலாளர்கள் பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக  மாற்றியிருக்கிறது. உ.பி. வழியில் பல சட்டங்களை 1200 நாட்களுக்கு ‘சஸ்பெண்ட்’ செய்து வைத்திருக்கிறது. இதேபோன்ற திசைவழியில் செல்வதற்காக அசாம் மற்றும் திரிபுரா மாநில அரசாங்கங்களும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

சமூக முடக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தொழிற்சாலைகள் சட்டத்தை மீறி, ஒரு நிர்வாக உத்தரவின் மூலமாகவே, குஜராத், இமாசலப் பிரதேசம்,  ஹரியானா, ஒடிசா, மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், பீகார், பஞ்சாப் ஆகிய எட்டு மாநில அரசாங்கங்கள் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றி இருக்கின்றன. தொழிலாளர்களுக்கு கூட்டுபேர உரிமை, முறையான ஊதியங்களுக்கான தாவா, பணியிடங்களில் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு உத்தரவாதம் போன்ற உரிமைகள் எதுவும் அளிக்காது அவர்களை ஒட்டச் சுரண்டுவதற்காக மட்டுமல்லாமல்,  அவர்களை அடிமை நிலைக்குத் தூக்கி எறியக்கூடிய விதத்திலும் அரக்கத்தனமான முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. பெண்கள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ள சமூகத்தினர் மேலும் பல வழிகளில் வலுக்கட்டாயமாகச் சுரண்டப்படும் நிலைக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்.

இவற்றின் பொருள் என்னவென்றால், ஊதிய உத்தர வாதம் எதுவும் கிடையாது, பாதுகாப்பு மற்றும் சுகா தாரக் கவனிப்பு கிடையாது, எல்லாவற்றிக்கும் மேலாக மனிதாபிமானமுறையிலான அனைத்துவிதமான கண்ணியமும் கிடையாது. தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டி, கொள்ளை லாபம் ஈட்டுவதற்கான அனைத்து வழிகளும் முதலாளிகளுக்கு ஏற்படுத்தித்தரப் பட்டிருக்கிறது. இவ்வாறு தொழிலாளர்கள் அனை வரும் உரிமைகள் பறிக்கப்பட்டு, கொத்தடிமைத் தொழி லாளர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இவை, மனித உரிமைகளின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானவைகளாகும். இந்தியத் தொழிலாளர் வர்க்கம், மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சியாளர் காலத்திற்குத் தள்ளப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆட்சியாளர்களின் இத்தகைய கொடும் செயல்களை தொழிற்சங்க இயக்கம் ஏற்க  முடியாது.

ஆட்சியாளர்களின் இத்தகைய தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை ஓரணியில்  திரண்டு தன் பலத்தை முழுமையாகப் பயன்படுத்தி, முறியடிக்க தொழிலாளர் வர்க்கம் உறுதிபூண்டிருக்கிறது. வரவிருக்கும் காலங்களில் தொழிலாளர்களை அடிமை நிலைக்குத் தள்ளும் முயற்சிகளுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுதும் அலை அலையாகத் தொடரும். ஆட்சியாளர்களின் இத்தகைய அரக்கத்தனமான மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கை களுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் ஆங்காங்கே தொழிலாளர்கள் கூட்டாக அணிதிரண்டு கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை மத்தியத் தொழிற்சங்கங்கள் குறித்துக் கொண்டுள்ளது.     இத்தகைய பின்னணியில், மத்தியத் தொழிற் சங்கங்களின் கூட்டுமேடை, ஆட்சியாளர்களின் தொழி லாளர் விரோத, மக்கள் விரோத தாக்குதல்களுக்கு எதிராக, வரும் மே 22 அன்று,  நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு தினம் கடைப்பிடித்திட தீர்மானித்திருக்கிறது.

அன்றைய தினம், தொழிற்சங்கங்களின் தேசியத் தலைவர்கள், தில்லி ராஜ்காட் காந்தி சமாதியில் ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொள்வார்கள். அன்றைய தினம் அனைத்து மாநிலங்களிலும் அதே சமயத்தில் கிளர்ச்சி இயக்கங்கள் நடைபெறும். அன்றிலிருந்து லட்சக்கணக்கான மனுக்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள் சார்பில் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இம்மனுக்களில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குப் போய்ச் சேர உடனடி நிவாரணம் அளிக்கப்பட வேண்டும், அனை வருக்கும் உணவு அளிக்கப்பட வேண்டும்,  நாட்டிலுள்ள  அனைவருக்கும் பொது விநியோக முறையில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அளிக்கப்பட வேண்டும், (பதிவுபெற்ற, பதிவுபெறா மற்றும் சுயவேலை யில் உள்ள) முறைசாராத் தொழிலாளர்கள் அனை வருக்கும் ரொக்க மாற்று அளிக்கப்பட வேண்டும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் அக விலைப்படி முடக்கம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும், பணியிடங்கள் சரண் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பவைகளும் இடம் பெறும்.

இதேசமயத்தில் மாநிலவாரியாகவும், துறை வாரி யாகவும் போராட்டங்கள் நடைபெறும் இடங்களில் ஆங்காங்கேயுள்ள பிரச்சனைகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். மேலும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், மத்திய அரசு தொழிலாளர் நலச் சட்டங்களை மீறியிருப்ப தற்கு எதிராகவும், மனித உரிமைகளை மீறியிருப்ப தற்கு எதிராகவும், சர்வதேச தொழிலாளர் சட்டங்களை மீறியிருப்பதற்கு எதிராகவும், ஒரு கூட்டு பிரதி நிதிக்குழுவை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்திற்கு அனுப்பி வைத்திடவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அகில இந்திய எதிர்ப்பு தினத்தை மாபெரும் அளவில் வெற்றிபெறச்செய்திடுமாறு மத்தியதொழிற் சங்கங்களின் கூட்டுமேடை அனைத்துத் தொழிலாளர் களையும், ஊழியர்களையும் அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு மத்தியத் தொழிற்சங்கங்கள்  அறைகூவல் விடுத்துள்ளன. இந்த அறிக்கையில் சிஐடியு சார்பில் தபன்சென், ஏஐடியுசி சார்பில் அமர்ஜீத் கவுர், தொமுச சார்பில் சண்முகம் உள்ளிட்டோர் கையொப்பமிட்டிருக்கிறார்கள்.