ஆல்வார்:
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பெஹ்லுகான் (55). பால் வியாபாரியான இவர், 2017 ஏப்ரல் 1-ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சந்தையிலிருந்து கறவை மாடுகளை வாங்கிக் கொண்டு, அதனை வாகனத்தில் ஏற்றி, ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது பெரோர் என்ற இடத்தில், அவரின் வாகனத்தை வழிமறித்த ‘பசு குண்டர்கள்’, பெஹ்லு கானை கடுமையாகத் தாக்கினர். பால் வியாபாரத்துக்காகவே மாடு வாங்கியிருக்கிறேன்: இறைச்சிக்காக அல்ல; அதேபோல மாட்டைக் கடத்தவில்லை என்று, ரசீது உட்பட ஆவணங்களை காட்டி பெஹ்லு கான் கதறியும் அந்த கும்பல் விடவில்லை. உருட்டுக் கட்டை மற்றும் இரும்புக் கம்பியைக் கொண்டு சரமாரியாக தாக்கியது. இதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெஹ்லு கான் அடுத்த இரண்டு நாட்களில் இறந்து போனார்.பெஹ்லு கான் கொல்லப்பட்ட செய்தியும், அவர் தாக்கப்படும் வீடியோவும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்கள் போராட்டங்கள் நடத்தின. அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில், ரூ. 10 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டு, பெஹ்லுகான் குடும்பத்திற்கு இழப்பீடாக வழங்கப்பட்டது.
இதனிடையே 2 சிறார்கள் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த, அன்றைய பாஜக அரசின் காவல்துறை, பெஹ்லு கான் மகன்களான இர்ஷத், ஆரிப், வாகன ஓட்டுநர் கான் மொகமது ஆகியோர் மீதும் பசுவைக் கடத்தியதாக வழக்குப் போட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்ட நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த விசாரணை, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நிறைவு பெற்றது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக 40 பேர் சாட்சியமளித்து இருந்தனர். 40 பேரில் இரண்டு பேர் பெஹ்லு கானின் மகன்கள். சம்பவம் நடைபெற்றபோது அவர்கள் இருவரும் உடனிருந்தவர்கள். பெஹ்லு கான் கும்பலாகத் தாக்கப்பட்டதற்கான வீடியோவும் நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்பிக்கப்பட்டு இருந்தது.இவ்வளவுக்கும் பிறகு, “வீடியோ ஆதாரம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை” என்று கூறி, குற்றம்சாட்டப்பட்ட 6 பேரையும் விடுதலை செய்து, கடந்த புதன்கிழமையன்று ஆல்வார் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட 6 பேரின் செயல்கள், செல்போன் காமிராவில் முழுமையாக பதிவாகி இருந்தாலும், அதனைச் சாட்சியமாக ஏற்க முடியாது; பெஹ்லு கான், தனது வாக்குமூலத்தில் குற்றவாளியின் பெயரைக் கூறவில்லை; இந்த கும்பல் வன்முறையை செல்போனில் படம்பிடித்த நபர் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சி சொல்லவில்லை; வீடியோவும் தெளிவாக இல்லாததால் குற்றவாளியைத் தெளிவாக அடையாளம் காண முடியவில்லை என்பன போன்றவையே குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கான காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, என்.டி.டி.வி.யின் புலன் விசாரணை வீடியோவை ஆதாரமாக காட்டுவதற்கு முயன்றதையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், பெஹ்லு கான் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பியுள்ளனர்.இது பெஹ்லு கான் குடும்பத்தினரையும், மனித உரிமை ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கி இருக்கிறது. ஆல்வார் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்வதென பெஹ்லு கான் ஊரைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்துள்ளனர்.