புதுதில்லி:
இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த சில வாரங்களாகவே அடி வாங்கி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு போகிறதே தவிர, ஓரிடத்தில் நின்ற பாடில்லை.அந்த வகையில், வியாழக்கிழமையன்றும் மும்பை பங்குச் சந்தை குறியீடான ‘சென்செக்ஸ்’, தேசியப் பங்குச் சந்தை குறியீடான ‘நிப்டி’ ஆகிய இரண்டுமே பலத்த அடி வாங்கியுள்ளன.கடந்த ஜனவரி 20 அன்று 42 ஆயிரத்து 273 என்ற உச்சபுள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ், மார்ச் 12 அன்றுசுமாராக 32 ஆயிரத்து 778 புள்ளிகளுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. வெறும் 53 நாட்களில் சுமார் 9 ஆயிரத்து 450 புள்ளிகளை சென்செக்ஸ் இழந்துள்ளது.நிப்டியும், இதேபோல வரலாறு காணாத விலை வீழ்ச்சியைக் கண்டுள்ளது. நிப்டி ஒரே நாளில் அதிகபட்சமாக 490 புள்ளிகள் வரை இழந்துள்ளது. ஆனால்,வியாழனன்று ஒரே நாளில் 850 புள்ளிகள் சரிந்து, புதியசாதனையைப் படைத்துள்ளது.
ரூபாய் மதிப்பு சரிவு
பங்குச் சந்தைகள் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அமெரிக்கா டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பும், கடந்த 17 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியை அடைந்துள்ளது. வியாழனன்று காலையில் ஒரு டாலருக்கு, 74 ரூபாய் 34 காசுகள் என்ற அளவில் ரூபாய் மதிப்பு சரிந்தது. வர்த்தக நேர முடிவில் 74 ரூபாய் 23 காசுகளுக்கு அது நிலை கொண்டது.