tamilnadu

img

மூடப்படாத கழிவுநீர் கால்வாய் தொட்டியில் விழுந்து வடமாநில குழந்தைகள் இருவர் உயிரிழப்பு!

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை பகுதியில் உள்ள தனியார் நூற்பாலைக்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வட மாநில குழந்தைகள் பரிதாபமாக கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தனர்.
ஈரோடு–சேலம் சாலையில், வெப்படை அடுத்துள்ள அம்மன் கோவில் வீதி பகுதியில் அமைந்துள்ள, பள்ளிபாளையத்தைச் சேர்ந்த தியாகுவுக்கு சொந்தமான (தேவேந்திரா) தனியார் நூற்பாலையில் 600-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்த நூற்பாலையில் கடந்த 5 ஆண்டுகளாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார்–அனிதா தம்பதியரும், ரத்வாஜ்–பாட்டோ தம்பதியரும் பணியாற்றி, அருகிலுள்ள வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இரு குடும்பங்களின் வீடுகள் அருகருகே இருந்ததால், அவர்களின் குழந்தைகளான லோகன் குமார் (4), ஹரிசங்கர் (3) ஆகியோர் நேற்று மாலை 4 மணியளவில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனனர்.
நீண்ட நேரமாகியும் குழந்தைகள் கிடைக்காததால், மாலை 6 மணியளவில் பெற்றோர் தேடியபோது, நூற்பாலையில் இருந்து சுமார் 400 மீட்டர் தூரத்தில் உள்ள கழிவுநீர் தேக்கத் தொட்டியில் அவர்கள் மிதந்துகொண்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக இரு சக்கர வாகனத்தில் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தைகள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, குழந்தைகளின் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, சொந்த மாநிலமான ஒடிசாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் ப்ரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல பல நூற்பாலைகளில் கழிவுநீர் தொட்டிகள் திற்ந்திருப்பதாகவும் உடநடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்