நாமக்கல், மே 30-குமாரபாளையம் அருகே வெப்படை சாலையில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், வெப்படையில் விசைத்தறி தொழில் மற்றும் கட்டுமான தொழில் பிரதான தொழிலாக உள்ளது. மேலும், இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மளிகைக் கடைகள் ஹோட்டல்கள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பல்வேறு விதமான குப்பைகள் வெப்படை- குமாரபாளையம் செல்லும் பிரதான சாலையில் கொட்டியுள்ளனர்.இதனால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் இப்பகுதியை கடந்து செல்லும்போது முகத்தை சுழித்துக்கொண்டு செல்கின்றனர். மேலும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆகவே மலை போல் தேங்கி நிற்கும் குப்பைகளை உடனடியாக அகற்றி சுகாதாரச் சீர்கேடு ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.