tamilnadu

img

நாமக்கல் அருகே சாக்கடை கழிவு நீரால் சுகாதார சீர்கேடு

நாமக்கல், மே 14-நாமக்கல் அருகே வேலகவுண்டம்பட்டி பகுதியில் சாக்கடை கழிவு நீரால் சுகாதார சீர்கேடு நிலவுவதை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி பகுதியில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன். இப்பகுதியில் பிரதான தொழில் விவசாயம் ஆகும். வேலகவுண்டம்பட்டி இருபுறமும் மளிகை கடைகள், ஹோட்டல், மெடிக்கல் என பல்வேறு வியாபார கடைகளும் வீடுகள் நிறைந்த பகுதியாக உள்ளன. கடந்தஆண்டு நாமக்கல்லில் இருந்து குமாரமங்கலம் வரை நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான  பணிகள் நடைபெற்றபோது, இவ்வூரின் அருகே உள்ள புத்தூர் ஓடை வாய்க்கால் பாதை குறுக்கே மேம்பாலங்கள் அமைக்கப்பட்டது. பாலத்தின் தூண்கள் அமைப்பதற்கு வாய்க்கால் பாதையில் குழி தோண்டிய மண், கற்கள் உட்பட பாலத்தின் அருகே மழை நீர் செல்லும் ஓடை பாதையில் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. இதனால், இப்பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் இப்பாலத்தின் அடியில்தேங்கி நின்று சுகதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் பொதுப்பணித் துறையினரும், நெடுஞ்சாலைத்துறையினரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் விட்டு விட்டனார். இதனால், குட்டை போல் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.