நாமக்கல், மே 11-தடை செய்யப்பட்ட, அச்சிடப்பட்ட காகிதங்களில் உணவுப் பண்டங்களை விற்பனை செய்யவோ, விநியோகிக்கவோ கூடாது என வியாபாரிகளுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது, தினசரி மக்கள் கூடும் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பதார்த்தங்கள், பழைய அச்சிடப்பட்ட காகிதங்கள் மற்றும் நெகிழிகளில் பரிமாறப்படுவது, பொட்டலமிடுவது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அச்சிடப்பட்ட காகிதங்கள் மற்றும் நெகிழிகளில் மடித்து வழங்கப்படும் உணவுப்பொருள்களினால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும்.குறிப்பாக, வடை, பஜ்ஜி, போண்டா, பக்கோடா, இறைச்சி, மீன்கள் போன்றவற்றை அச்சிடப்பட்ட காகிதங்களில் வைத்து எண்ணெயைப் பிழிவது சிறிது, சிறிதாக நாம் விஷத்தை உண்பதற்கு சமமாகும். உணவுப் பொருளுடன் அச்சிடப்பட்ட காகிதங்களில் உள்ள மையானது மிகவும் தீவிரமான உடல் பாதிப்பையும், எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும். அச்சிடப்பட்ட காகிதங்களில் உள்ள மையில் அதிக வண்ண நிறமிகள், வேதி அசுத்தங்கள், கிருமிகள் இருப்பதால் அவை உடலுக்கு உகந்தவை அல்ல. அஜீரணக் கோளாறை உருவாக்குவதோடு, கடுமையான விஷத்தன்மையையும் ஏற்படுத்துகிறது.இந்த மாதிரியான பொருள்களை உணவுடன் பயன்படுத்துவதால், வயதானவர்கள், குழந்தைகள், வளரினப் பருவத்தினர் நோய் எதிர்ப்பு சக்தி இழந்து புற்றுநோய்க்கு ஆளாகின்றனர். ஆகையால், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தால் அச்சிடப்பட்ட காகிதங்கள் மற்றும் நெகிழிகள் போன்றவற்றால் உணவை பேக்கிங் செய்வதோ, அச்சிடப்பட்ட காகிதங்களில்; எண்ணெய் பிழியவோ, கையில் வைத்து உண்ண பயன்படுத்தவோ, நாடு முழுவதும் தடை உள்ளது.எனவே, தேநீர் கடைகள், உணவகங்கள், சிற்றுண்டி விடுதிகள, பேருந்து நிலையங்களில் உள்ள எண்ணெய் பலகாரக் கடைகளில் அச்சிடப்பட்ட காகிதங்களில் உணவுப் பண்டங்களை விற்பனை செய்ய வேண்டாம்.அவ்வாறு வழங்கப்படும் உணவுப் பொருள்களை மக்கள் உட்கொள்ள வேண்டாம். அவ்வாறு யாராவது விற்பனை செய்வது தெரிய வந்தால், நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் கட்செவி அஞ்சல் எண் 94440-42322 தொடர்பு கொண்டு மாவட்ட நியமன அலுவலரிடம் புகார் கூறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.