tamilnadu

img

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு இளம் பெண் ஒருவரை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை விடியோவாக பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு கும்பல் மிரட்டி வந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது சகோதரரிடத்தில் தெரிவித்த நிலையில், பாலியல் சீண்டல் செய்த இளைஞர்களை அவர் விசாரித்துள்ளார். அப்போது, அந்த இளைஞர்கள் வைத்திருந்த செல்போன்களில் ஏராளமான இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துன்புறுத்தப்படும் விடியோக்கள் இருந்துள்ளன. 
இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த வழக்கில் இவ்வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். 
இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு, பின்னர் 2019 ஏப்.25-இல் சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. அதே போல கைது செய்யப்பட்டவர்கள், பாதுகாப்பு கருதி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 9 பேரும் குற்றவாளிகள் என கோவை சிறப்பு நீதிமன்றம் தீப்பளித்துள்ளது.
குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏ1 குற்றவாளியான சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனைகள், ஏ2 குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனைகள், ஏ3 குற்றவாளி சதீஷ்குமாருக்கு 3 ஆயுள் தண்டனைகள், ஏ4 குற்றவாளி வசந்துக்கு 2 ஆயுள் தண்டனைகள், ஏ5 குற்றவாளி மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனைகள், ஏ6 குற்றவாளி பாபுவுக்கு 1 ஆயுள் தண்டனை, ஏ7 குற்றவாளி ஹேரோன் பாலுக்கு 3 ஆயுள் தண்டனைகள், ஏ8 குற்றவாளி அருளானந்தத்துக்கு 1 ஆயுள் தண்டனை, ஏ9 குற்றவாளி அருண்குமாருக்கு 1 ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு விதித்த அபராதத்தையும் வசூலித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கே பிரித்து தரவும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.