நாகர்கோவில்;
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தி ஆலோசனை பெற்று தீவிர நடவடிக்கை எடுத்திடவும், சிகிச்சை மற்றும் பரிசோதனை களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை களைந்திட வலியுறுத்தி வெள்ளியன்றுகுமரி மாவட்டம் முழுவதும் சுமார் 300 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
மருத்துவமனைகள், கொரோனா சிறப்பு முகாம்களில் அடிப்படை சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், ஆம்புலன்ஸ், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை அதிகரித்திட வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நாகர்கோவிலில் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், எம்.அகமது உசேன், கே.தங்கமோகன், வட்டார செயலாளர் கே.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிபிஎம் அருமனை குழிச்சல் கிளைசார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு கிளை செயலாளா் ஜோஸ்இன்பராஜ் தலைமை தாங்கினார். அருமனை அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு வி.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். கட்சி அருமனை வட்டாரச் செயலாளர் சி.சசிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்ட னா். குழித்துரை, மார்த்தாண்டம் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் நகராட்சி உறுப்பினர் சுனில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுபோல் தக்கலை, இராஜாக்கமங்கலம், அகஸ்தீஸ்வரம், தோவாளை உட்பட 300 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.