தரங்கம்பாடி நவ.2- மயிலாடுதுறை அருகேயுள்ள தேரிழந்தூரில் வீட்டில் கொள்ளையடித்ததோடு, வீட்டையும் அபகரித்துள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குடும்பத்துடன் ஒருவர் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம் குத்தாலம் வட்டம், தேரிழந்தூர் சிவன் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் தங்ககணேசன்(52). இவரது மனைவி இறந்து விட்ட நிலையில் தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார். வீட்டிற்கு அருகிலேயே உள்ள தனக்கு சொந்தமான கூரை வீட்டில் ஏராளமான பொருட்களை வைத்து பூட்டி வைத்திருந்த நிலையில் ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் இமயவரம்பன் மற்றும் ராஜாஜி, மதியழகன் ஆகியோர் வீட்டிலிருந்த 2 லட்சத்துக்கும் அதிகமான பொருட்களை கொள்ளையடித்ததாகவும், வீட்டையும் ஆக்கிரமித்து அங்கேயே தங்கியுள்ளதாகவும் இதுகுறித்து புகார் அளித்தும், குத்தாலம் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி தனது மகள் மற்றும் மகனுடன், மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில், கையில் கோரிக்கை அட்டையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மயிலாடுதுறை துணைக் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தங்க கணேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், வருவாய் கோட்டாட்சியர் கண்மணி, தங்ககணேசனை அழைத்து விசாரணை நடத்தி உரிய நீதி பெற்றுத் தருவதாக அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து தங்ககணேசன் தர்ணா போராட்டத்தை விலக்கிக் கொண்டார். குத்தாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் நடந்தாலும், அது குறித்து அளிக்கப்படும் புகார்கள் மீது எந்தவித நடவடிக்கையும் துரிதமாக எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.