நாகப்பட்டினம்:
ஜனவரி மாத தொடக்கத்தில் பெய்த தொடர் கனமழையால் காவிரிடெல்டா பகுதிகளில் அறுவடைக்குதயாராக இருந்த பல்லாயிரக்கணக் கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி, அழுகி நாற்று முளைத்ததால் சொல்ல முடியாத கடும் துயரத்தில் விவசாயிகள் உள்ளனர்.
குறிப்பாக நாகப்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் இரு புயல்களில் தப்பிப் பிழைத்த பயிர்களும் முற்றிலும் நாசமாய் போனது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் கேட்டும், விவசாயிகள் பெற்ற அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கட்கிழமை நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் கோரிக்கைகளை முழக்கமிட்டு சாலை மறியல் நடைபெற்றது.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் சிக்கலில் மாநிலக்குழு உறுப்பினர் வீ.மாரிமுத்து தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகத்தில் 50-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கீழ்வேளூர், சாட்டியக்குடி, தேவூர் ஆகிய 3 இடங்களில் சாலை மறியல்போராட்டம் நடைபெற்றது. கீழ்வேளூரில் ஒன்றிய செயலாளர் ஜி.ஜெயராமன் தலைமை வகித்தார். நாகை மாவட்டசெயலாளர் நாகைமாலி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.சிவக்குமார், எஸ்.பாண்டியன், எம்.சாந்தி உள்ளிட்டோர் உரையாற்றினர். சாட்டியக்குடியில் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.என். அம்பிகாபதி தலைமை வகித்தார். தேவூரில் மாவட்டக்குழு உறுப்பினர் என்.எம்.அபுபக்கர் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.முத்தையன், எஸ்.நடராஜன், ஏ.சந்திரசேகர், டி.ஏ.முருகையன், ஆதமங்கலம் ஊராட்சி தலைவர் அகிலா சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் டி.துரைராஜ், மாரிமுத்து, அண்ணாத்துரை, அணக்குடி ஊராட்சி தலைவர் கஸ்தூரி கனகரெத்தினம் ஆகியோர் உரையாற்றினர். 3 இடங்களிலும் நடைபெற்ற சாலை மறியலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர்.
திருவாரூர் மாவட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடவாசல் ஒன்றியத்தில் வி.பி.சிந்தன் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.லெட்சுமி தலைமைவகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் நா.பாலசுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கொரடாச்சேரி ஒன்றியம் வெட்டாறுபாலம் அருகே சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.சீனிவாசன் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் நடைபெற்ற மறியலுக்கு ஒன்றியச் செயலாளர் என்.ராதா தலைமை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், மாவட்ட குழு உறுப்பினர் கே.சுப்பிரமணியன் மற்றும் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.நீடாமங்கலத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சோம.ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகர-ஒன்றிய குழு சார்பில், கனமழையால் அழுகிப்போன நெற்பயிர்களை விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் கையில்எடுத்துக் கொண்டு, டாக்டர் அம்பேத்கர் சிலையிலிருந்து ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். நகரச் செயலாளர் கே.ஜி.ரகுராமன், ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ் தலைமை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சாமிநாதன், கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினர்.
திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியகுழுவின் சார்பில் ஆலத்தம்பாடி கடைத்தெருவில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வி.டி.கதிரேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.என்.முருகானந்தம் கண்டன உரையாற்றினார்.முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி, மாவட்டக் குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன் உட்படநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.