கோவை தொண்டாமுத்தூர் அட்டுக்கல் பழங்குடி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள அட்டுக்கல் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் (30), என்பவர் இன்று காலை வழக்கம் போலக் காலைக்கடன் கழிக்க அருகே உள்ள புளியந்தோப்பு என்ற பட்டா நிலத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காட்டு யானை தாக்கியதில் தேவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த பழங்குடி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் காட்டு யானைகளை வேறு பகுதியில் இருந்து விரட்டுவதால் தான் இந்தப் பகுதிக்கு வருவதாகவும், இதனால் தொடர்ந்து அச்சத்துடன் மக்கள் இருந்து வருவதாக வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அட்டுக்கல் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் திடீரென தொண்டாமுத்தூர் காவல் நிலையம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அட்டுக்கல் பழங்குடி கிராமத்தில் பொதுக்கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் தான் இம்மாதிரியான உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், உடனடியாக அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் எனக் கூறி மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.