மயிலாடுதுறை:
இந்தியாவின் முதல் தமிழ் நீதிபதியும், முதல் தமிழ் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் எழுதியவருமான மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் 132-வது நினைவு நாள் புதனன்று கடைப்பிடிக்கப்பட்டது.மயிலாடுதுறை கல்லறை தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி தமுஎகச சார்பில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாலசுந்தரம் மற்றும் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
11.10.1826-ல் பிறந்த வேதநாயகம் பிள்ளை தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் புலமை பெற்றவர். தரங்கம்பாடியில் இருந்த உரிமையியல் நீதிமன்றத்தில் 1857-ல் தனது 31-வது வயதில் நீதிபதியாக பணியமர்ந்தார். 1858-ல் சீர்காழிக்கு மாற்றலாகி, 1860-ல் மயிலாடுதுறை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இறுதிநாள் வரை அங்கேயே வாழ்ந்தார். பிரிட்டிஷ்காரர்களின் கீழ் பணியாற்றினாலும், ‘நான் ஒன்றும் அவர்களுக்கு அடிமை இல்லை’ என வாழ்ந்தவர். தன்மானம் தான் பெரிது என பணியை உதறினாலும் ஆங்கிலேயர்களாலேயே கவரப்பட்ட அறிவுத்திறன் கொண்டவராக பணியாற்றினார். கவிஞர், எழுத்தாளர், மயிலாடுதுறையின் முதல் நகர்மன்ற தலைவர் என பல சிறப்புகளுக்கு சொந்தக்காரரான வேதநாயகம் பிள்ளை பிரதாப முதலியார் சரித்திரம், சுகுணசுந்தரி என்கிற நாவல்கள் பெண்கல்வி, பெண்மானம், பெண்மதிமாலை, பொம்மை கல்யாணம், திருவருள்மாலை, திருவருள் அந்தாதி, தேவமாதா அந்தாதி, சர்வ சமய கீர்த்தனைகள், 1850-61 வரையிலான முக்கிய தீர்ப்புகள் அடங்கிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இலக்கியங்களிலும், கவிதைகளிலும் பெண்கல்வி குறித்தும், பெண் அடிமைத்தனத்திற்கு எதிராகவும் எழுதியுள்ளார். 1876-78 களில் ஏற்பட்ட கடுமையான உணவு பஞ்சத்தின்போது தனது பெரும் சொத்தை விற்று மயிலாடுதுறையில் பல இடங்களில் கஞ்சித்தொட்டிகளை அமைத்து மக்கள் பசியை போக்கினார். 1873-ல் மயிலாடுதுறை நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பெண்களுக்கான முதல் கல்விக்கூடத்தை ஏற்படுத்தி சாதித்து காட்டியவர். மக்கள் தலைவனாக, நீதியரசராக, இலக்கிய மேதையாக, மறுமலர்ச்சி கவிஞராக வாழ்ந்த அவர் 1889 ஆம் ஆண்டு ஜூலை 21-ல் இறந்த பிறகு அவர் புதைக்கப்பட்ட இடத்திலேயே அவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. கடும் பஞ்சத்தின் போது மக்கள் பசி தீர்த்த மகத்தான மனிதரின் புகழை பறைசாற்றும் வகையில் மயிலாடுதுறையில் அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். அவர் பணியாற்றிய மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சிலை வைத்து மரியாதை செய்வதோடு, அவரதுபிறந்த-இறந்த நாட்களை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென்றும் மயிலாடுதுறையில் அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் விரும்புகின்றனர். அரசு நடவடிக்கை எடுக்குமா?