மகாராஷ்டிர மாநில விவசாயிகள் இயக்கத்தின் மாபெரும் தலைவராக விளங்குபவர் தோழர் ஜே.பி. கேவிட். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 1978 முதல் 1995 வரையும், 1999 முதல் 2009 வரையுமாக 6 முறை சர்கானா சட்டமன்றத் தொகுதியிலும், 2014-ஆம் ஆண்டு கல்வான் சட்டமன்றத் தொகுதியிலுமாக மொத்தம் 7 முறை எம்எல்ஏவாக வெற்றிபெற்றவர். எளிய மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற செல்வாக்கு மிக்கத் தலைவர்.அவர்தான் தற்போது, மக்களவைத் தேர்தலில், திந்தோரி தொகுதி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், தோழர் ஜே.பி. கேவிட்டை, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு பேட்டி கண்டுள்ளது. அந்த பேட்டியில் எழுப்பப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஜே.பி. கேவிட் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: தேர்தலில் நீங்கள் நிறுத் தும் முக்கியமான அம்சம் என்ன?
பதில்: பாஜகவைத் தோற்கடிப்பது மற்றும் மதச்சார்பற்ற அரசை மத்தியில் அமைப்பது ஆகியவைதான் எங்கள் பிரச்சாரத்தின் முக்கியமான அம்சங்களாகும்.
கேள்வி: நீங்கள் சமூகப் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருக்கும் பகுதியைச் சேர்ந்தவர். பாஜக எதிர்ப்பு என்ற உங்கள் பிரச்சாரம் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் உங்கள் தொகுதியில் எடுபடும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: இந்தப் பகுதியில் உள்ள பிரச்சனைகள் மீது பிரச்சாரத்தின்போது கவனம் செலுத்துவோம். மக்களின்பிரச்சனைகளுக்கு மோடி அரசின் மோசமான செயல்பாடுகள்தான் காரணம் என்பதை எடுத்துரைப்போம். அரபிக்கடலில் வீணாகக் கலக்கின்ற- குஜராத்துக்குத் திருப்பிவிடப்பட்டு வருகின்ற தண்ணீரை, மகாராஷ்டிரத்தின் வறண்ட பகுதிகளான வடக்குமகாராஷ்டிரா மற்றும் மராத்வாடா பகுதிகளுக்கு கொண்டுவர வேண்
டும் என்பதும், அதனை உறுதிப் படுத்துவதும்தான் எங்கள் பிரதான கோரிக்கையாக இருக்கும்.
கேள்வி: காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் மற்றும் பாஜக - சிவசேனா என்று உங்கள் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. யார் உங்களுடைய பிரதான போட்டியாளர்?
பதில்: கொள்கை ரீதியாக, பாஜகதான் பிரதான போட்டியாளர். இந்தத் தொகுதியில் தற்போது அக்கட்சியைச் சேர்ந்தவர்தான் எம்.பி.யாக இருக்கிறார். நமது தேசத்தின் அடிக் கட்டுமானத்தை உடைத்தெறியும் பாஜகவின் முயற்சிகளைத் தோற்கடிப்பதுதான் பிரதான கடமையாகும்.
கேள்வி: 7 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ள நீங்கள், மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் என்ன?
பதில்: எங்கள் சக்திக்கு உட்பட்டு தொகுதியின் மேம்பாட்டிற்கு நாங்கள் செய்திருக்கிறோம். கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தப் பகுதியை நாங்கள் எப்படி மாற்றியிருக்கிறோம் என்று மக்களிடம் கேட்டுப் பாருங் கள். தங்களுக்கு அதிகாரம் கிடைத்திருப்பதாக இப்பகுதி மக்கள் உணர்கிறார்கள். ஆனால் மத்திய அரசிடம் இருந்து கோரிப் பெறும் வகையில் ஏராளமான கொள்கை ரீதியான பிரச்சனைகள் உள்ளன. இதனால்தான் தேசிய அரசியல் களத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், நான்கட்சிக்கு விசுவாசமான ஊழியர். கட்சி சொல்வதைக் கேட்டு நடக்கிறேன்.
கேவிட்டுக்கு பழங்குடி மக்கள் ஆதரவு
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பல்வேறு பழங்குடி மக்கள் அமைப்புகள் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளன. மொத்தம் 7 மக்களவைத் தொகுதிகளை அந்த அமைப்புக்கள் குறி வைத்துள்ளன. ஆனால், திந்தோரி தொகுதியில் மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஜே.பி. கேவிட்டிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை, அகில பாரதிய ஆதிவாசி விகாஸ் பரிசத் அமைப்பின் தலைவரான லக்கி ஜாதவ் வெளியிட்டுள்ளார்.
தமிழில் : கணேஷ்