உள்நாட்டு துறைகளை வெளிநாட்டு போட்டியாளர்களிடமிருந்து காப்பதற்காக எடுக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகள் ஒரு போதும் வேலைவாய்ப்புகளை காப்பாற்ற உதவாது என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெற்ற நிதியியல் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ரகுராம் ராஜன், உலக நாடுகள் இன்று கையாளும் தற்காப்பு பொருளாதார நடவடிக்கைகளால் வேலை வாய்ப்புகளைக் காப்பாற்றி விட முடியாது என்றார்.
அவர் மேலும் பேசியதாவது, “கடந்த 60 ஆண்டுகளாக உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாராளவாத ஜனநாயக சந்தை அமைப்பு அளப்பரிய வளர்ச்சி வாய்ப்புகளை அள்ளித் தந்திருக்கிறது. ஆனால், இப்போது உலகம் இரண்டாம் உலகப் போருக்கு அடுத்த மிகப்பெரிய தாக்குதலைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்தப் போட்டி நிறைந்த உலகத்தில், ஒரு நாடு சில துறைகளில் தான் உருவாக்கிய வேலைவாய்ப்புகளை தக்கவைப்பதற்கான கொள்கை நடவடிக்கைகளை எடுத்தால், அது பிற துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளைப் பாதிக்கும். எனவே ஒரு போதும் இதுபோன்ற பொருளாதார நடவடிக்கைகள் வேலை வாய்ப்புகளைக் காப்பாற்ற உதவாது. அதேசமயம், இதுபோன்ற தற்காப்பு பொருளாதார நடவடிக்கைகள் இயந்திரமயமாதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கத்தால் வேலைவாய்ப்புகள் அழிவதை ஓரளவுக்குத் தடுக்க உதவலாம்.
இன்று ஒரு நாட்டின் இறக்குமதியை ஒரு நாடு தடை செய்தால், மீண்டும் எதிர்காலத்தில் அதே நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியுமா? வளரும் நாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் வெளிநாடுகளை நம்பித்தான் இருக்க வேண்டியதாய் இருக்கிறது. எனவே நாடுகளுக்கு இடையிலான சர்வதேச திறந்த சந்தை எப்போதும் ஜனநாயகத் தன்மையுடன் பேணிக்காக்கப்பட வேண்டும். மேலும், வளரும் நாடுகள் மற்றொரு பாதிப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உலக மயமாக்கலாலும், கணினி மயமாக்கலாலும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய மக்களின் ஜனநாயக எதிர் வினைகளைக் கண்டும் காணாமல் இருந்துவிட முடியாது. இல்லையெனில் அதற்கு நாம் மிகப்பெரிய தாக்கத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். வளரும் நாடுகளின் அரசுகள் இதை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இதுவரையிலும் அப்படி புறக்கணிக்கப்பட்ட மக்களை நாம் கண்டுபிடிக்கவும் இல்லை. அவர்களுக்கான வாழ்வாதாரத்துக்கு தீர்வு காணவும் இல்லை.
வளரும் நாடுகளாக இருக்கட்டும், தொழில் துறை நாடுகளாக இருக்கட்டும், இவை இரண்டுமே தங்கள் நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அடையாளம் கண்டு அதை சரி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மட்டுமே எதிர்கால நெருக்கடிகளைத் தவிர்க்க முடியும்” என்றார்.