மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
மயிலாடுதுறை தில்லையாடி கிராமத்தின் அருகே நாட்டு வெடிகள் தயாரிக்கும் ஆலையில் நாட்டு வெடிகள், வாணவெடிகள் உள்ளிட்ட வெடி வகைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு சுப துக்க நிகழ்ச்சிகளுக்கும், தீபாவளி பண்டிகையின்போதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அங்கிருந்த வெடிகள் அனைத்தும் வெடித்து சிதறின. சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் இந்த அதிர்வு உணரப்பட்டது.
இந்த விபத்தில் வெடி ஆலையில் பணியாற்றிய 4 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு உடல் பாகங்கள் சிதறிக் கிடந்துள்ளன.
மேலும், ஒரு சிலர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் ஆலையின் உரிமையாளர் மோகன் கைது செய்து வெடி விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.