மும்பை:
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே பர்பானி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் நிலையில், புதிதாக, சரத் பவாரின் பேரன் பர்த் பவாருக்கும் மாவல் தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டுள்ளார். ஆனால், தோல்வி பயம் காரணமாகவே சரத் பவார் களத்திலிருந்து வெளியேறி விட்டதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சரத் பவார் குடும்ப அரசியல் நடத்துவதாகவும் கூறி வருகிறார்.இதற்கு சரத் பவார் தற்போது பதிலளித்துள்ளார்.
“நான் போட்டி நடக்கும் களத்தைவிட்டு வெளியேறி விட்டதாக உத்தவ் தாக்கரே கூறுகிறார். நான் 14 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். 80 வயதை நெருங்கிவிட்டதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்தினேன்.நீங்கள் (உத்தவ்தாக்கரே) ஒருமுறையாவது களத்திற்கு வந்து (தேர்தலில்) போட்டியிடுங்கள். என்னை மறந்துவிடுங்கள், எனது கட்சியின் சிறு மல்யுத்த வீரன் (தொண்டன்) கூட உங்களை தோற்கடித்துவிடுவான்.கட்சிக்காக உழைக்காமலேயே, பால்தாக்கரே உருவாக்கிய சிவசேனாவைக் கைப்பற்றி கொண்டவர்தானே நீங்கள்” என்றும் சரத் பவார் சாடியுள்ளார்.