தொழிலாளர்களைப் பிளவுபடுத்தும் பிற்போக்குச் சித்தாந்தம் ‘ஷ்ரம் சக்தி’ கொள்கைக்கு எதிராகத் தொழிலாளர் இன்று ஆவேசப் போராட்டம்
ஒன்றிய மோடி அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உழைப்பாளிகளின் உரிமைகளைப் பறித்து வரும் நிலையில், அதன் அடுத்த கட்டமாக ‘ஷ்ரம் சக்தி கொள்கை 2025’ (Shram Shakti Policy 2025) என்ற வரைவு அறிக்கை யை வெளியிட்டுள்ளது. இது சமத்துவம் மற்றும் நீதி ஆகிய அரசியலமைப்பு விழுமியங்களுக்கு முற்றிலும் மாறானது மட்டுமல்லாமல், தொழி லாளர் நிர்வாகத்தில் பிற்போக்குத்தனமான வகுப்புவாதக் கொள்கைகளைத் திணிக்கும் முயற்சியுமாகும். மனுஸ்மிருதி வழிநடத்தும் தொழிலாளர் கொள்கை இந்த வரைவுத் திட்டத்தின் சாராம்சம், இந்திய அரசியலமைப்பை அடிப்படையாகக் கொள்ளாமல் ‘மனுஸ்மிருதி’ மற்றும் ‘ராஜ தர்ம’ சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டுள் ளது. மனுஸ்மிருதி என்பது உழைக்கும் மக்களை (சூத்திரர்களை) உயர் சாதியினருக்குச் சேவை செய்யப் பிறந்தவர்கள் என்றும், அவர்கள் செல்வம் சேர்க்க உரிமையற்றவர்கள் என்றும் வரையறுக்கிறது. “தொழிலாளர்கள் கடமை யைச் செய்ய வேண்டும், உரிமைகளைப் பேசக் கூடாது” என்ற இந்தச் சாஸ்திரக் கோட்பாடுகளைத் தொழிலாளர் சட்டங்களுக்குள் கொண்டுவர மோடி அரசு முயல்கிறது. இது உழைக்கும் வர்க்கத்தைச் சாதி மற்றும் மத ரீதியாகப் பிளவுபடுத்தும் சூழ்ச்சியாகும். கண்காணிப்பு முறையைச் சிதைத்தல் முன்பு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் என்பது சட்டங்களை அமல்படுத் தும் மற்றும் ஆய்வு செய்யும் அதிகாரத்தைக் கொண்டிருந்தது. ஆனால் புதிய கொள்கைப்படி, அமைச்சகம் தன்னை ஒரு ‘ ஏற்பாட்டாளராக’ (Facilitator) மட்டுமே நிலைநிறுத்திக் கொள்கிறது. இதன் மூலம் ‘சுய சான்றிதழ்’ முறையை ஊக்குவித்து, முதலாளிகளின் விதிமீறல்களைக் குற்றமற்றதாக்க வழிவகை செய்கிறது. இது சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வலி யுறுத்தும் ஆய்வு மற்றும் பாதுகாப்பு நெறி முறைகளை முற்றிலும் சிதைக்கும் செயலாகும். இது தொழிலாளர் நல ஆய்வுகளை முடக்கி, முதலாளிகளுக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்குகிறது. ஒரே நாடு – ஒரே உழைக்கும் சக்தி: கூட்டாட்சிக்கு எதிரான தாக்குதல் ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கையான ‘ஒரே நாடு, ஒரே மதம்’ என்பதன் தொடர்ச்சி யாக, 2047-க்குள் ‘ஒரே நாடு, ஒரே ஒருங்கி ணைந்த உழைக்கும் சக்தி’ என்ற இலக்கை நோக்கிச் செயல்படுவதாக இந்த ஆவணம் கூறுகிறது. தற்போது தொழிலாளர் துறை என்பது மாநிலப் பட்டியலில் உள்ளது. இதனை மத்திய அரசின் முழுமையான கட்டுப்பாட்டிற்குக் கொண்டு செல்வதன் மூலம், மாநில அரசுகள் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியம், நலவாரியச் சலுகைகள் ஆகியவற்றை மோடி அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள முற்படுகிறது. மாநிலங்கள் வசூலிக்கும் நலவாரிய நிதியை மத்திய அரசு தன்வசமாக்கி, அதனை கார்ப்பரேட் நலன்களுக்காகப் பயன்படுத்தும் ஆபத்து இதில் ஒளிந்துள்ளது. பழங்குடியின நில அபகரிப்பும் அடையாளச் சிதைப்பும் லட்சக்கணக்கான பழங்குடியினர் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் தங்கள் வாழ்விடங்களில் இருந்து இடம்பெயர்க்கப்பட்டு, அவர்களின் நிலங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதற்காகவே இக்கொள்கை வகுக்கப் பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக ஆகி யவை அவர்களின் தனித்துவமான பழங்குடி அடையாளத்தைச் சிதைத்து, ஒரு போலியான இந்து அடையாளத்தை உருவாக்கி, அவர் களை இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தூண்டி விடுகின்றன. இது உழைக்கும் மக்களின் வர்க்க ஒற்றுமையை உடைப்பதற்கான தேர்தல் காலச் சூழ்ச்சியாகும். பெண்களுக்கும் தலித்துகளுக்கும் எதிரான வஞ்சனை பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாகப் பேசும் அரசு, மறுபுறம் பெண்களுக்கு நிரந்தர அடிமைத்தனத்தை விதிக்கும் மனுஸ்மிருதி சிந்தனைகளை ஊக்குவிக்கிறது. பெண் தொழிலாளர் பங்களிப்பு அதிகரித்துள்ளதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள் உண்மையில் ஊதியம் இல்லாத குடும்ப உழைப்பையே குறிக் கின்றன. மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை ஒடுக்கிய விதம், இந்த அரசின் பெண் எதிர்ப்பு மனநிலையை அம்பலப்படுத்தி யுள்ளது. அதேபோல், தனியார்மயமாக்கல் மூலம் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்புகளைச் சிதைத்துவிட்டு, தேர்தல் ஆதாயத்திற்காக அம்பேத்கரைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள பாஜக முயல்கிறது. பாசிச குணாதிசயமும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலும் இந்திய விடுதலைப் போராட்டத்திலோ அல்லது தொழிலாளர் உரிமைப் போராட்டத் திலோ எவ்விதப் பங்கும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, இன்று அரசு இயந்திரம் முழுவதையும் தனது பிடிக்குள் கொண்டுவந்துள்ளது. கல்வி, நீதித்துறை, ராணுவம் மற்றும் நிர்வாகம் என அனைத்திலும் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலைப் புகுத்துகிறது. கார்ப்பரேட் அதிகாரம் மற்றும் வகுப்புவாதப் பிளவு ஆகிய இரண்டும் இணைந்து உழைக்கும் வர்க்கத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. போராட்டக் களம் காண்போம்! இந்தியத் தொழிலாளி வர்க்கம் ரத்தம் சிந்திப் பெற்ற சட்ட உரிமைகளைத் தக்க வைத்துக்கொள்ளப் போராட வேண்டிய தருணம் இது. ஷ்ரம் சக்தி கொள்கை மற்றும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய முதலீடு, அணுமின் உற்பத்தி தனியார்மயம் போன்ற தேச விரோத நடவடிக்கைகளை எதிர்த்துத் தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் 23 அன்று மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெறுகிறது. சிஐடியு (CITU) முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தில் தமிழகத் தொழிலாளி வர்க்கம் திரளாகப் பங்கேற்று ஆதரவு தர வேண்டும். நமது உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைந்து களம் காண்போம்!
